குர்ஆனுக்குப் பதிலளிக்கிறீர்களா அல்லது வெறுமனே ஓதுகிறீர்களா?

அல்லாஹ் குர்ஆனில் உங்களோடு பேசுகிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் குர்ஆனுடன் உரையாடும்போது, அது உங்கள் உள்ளத்தை, வழிபாடுகளை மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையையே மாற்றியமைக்கும்.

பல முஸ்லிம்கள் தினமும் குர்ஆன் ஓதுகிறார்கள். ஆனால் நாம் உண்மையில் குர்ஆனுக்குப் பதில் அளிக்கிறோமா அல்லது அதன் வார்த்தைகளை வெறுமனே உச்சரிக்கிறோமா?

மிக முக்கியமான ஒரு நபர் உங்களிடம் பேசினால்… நீங்கள் பதிலளிப்பீர்கள் அல்லவா?

அவர் உங்களிடம் கேள்வி கேட்டால்… நீங்கள் பதில் சொல்வீர்கள் அல்லவா?

எல்லாவரையும் விட மிக முக்கியமான நம்மையும், வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ் நம்மிடம் குர்ஆனில் பேசுகிறான்.

அல்லாஹ் நம்மிடம் ஒரு கேள்வி கேட்கும்போது… நாம் பதில் சொல்கிறோமா?

வாருங்கள், நபி (ஸல்) அவர்கள் குர்ஆனுக்கு எவ்வாறு பதிலளித்தார்கள் என்பதைக் கற்றுக்கொள்வோம்.

நபி (ஸல்) குர்ஆனுக்கு எவ்வாறு பதிலளித்தார்கள்?

ஹுதைஃபா (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்:

அவர்கள் நிதானமாகவும் அளவோடும் ஓதுவார்கள். அல்லாஹ்வைப் புகழும் வசனத்தை ஓதும் போது, அவனைப் புகழ்வார்கள்; துஆவின் வசனத்தை ஓதும் போது, அல்லாஹ்விடம் துஆ செய்வார்கள்; பாதுகாப்புக் கோரும் வசனத்தை ஓதும் போது, அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் # 772

நபி (ஸல்) குர்ஆனின் வார்த்தைகளை மட்டும் உச்சரிக்கவில்லை. குர்ஆனை சிந்தித்தார்கள். குர்ஆனுக்குப் பதிலளித்தார்கள். அவர்களுக்கு அல்லாஹ்வின் வார்த்தைகளோடு ஒரு ஆழமான தொடர்பு இருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) குர்ஆனை எப்படி ஓதினார்கள் என்பதை கற்றுக் கொள்ள, இங்கே கிளிக் செய்யவும்.

விடியும் வரை ஒரே ஒரு வசனத்தை மீண்டும் மீண்டும் ஓதிய நபி (ஸல்)

அபூ தர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் விடியும் வரை ஒரே ஒரு வசனத்தை மீண்டும் மீண்டும் ஓதிக் கொண்டிருந்தார்கள். ‘நீ அவர்களைத் தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே; நீ அவர்களை மன்னித்தால், நிச்சயமாக நீயே மிகைத்தவன், ஞானமிக்கவன்’. (5:118)

இப்னு மாஜா # 1350

நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை அவசர அவசரமாக ஓதவில்லை. குர்ஆனை ஆழமாக சிந்தித்து உணர்ந்து ஓதினார்கள்.

இந்த ஹதீஸிலிருந்து நாம் பெறும் பாடங்கள்

  • எண்ணிக்கையில் அதிகமாக ஓதுவதை விட, குர்ஆனை சிந்தித்து, நிதானமாக ஓதுவது தான் சிறந்தது.
  • குர்ஆனின் ஒரே ஒரு வசனம் உங்களுக்குள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
  • மீண்டும் மீண்டும் ஓதுவது உங்கள் சிந்தனையை அதிகரிக்கும்.
  • குர்ஆனை உணர்வுப்பூர்வமாக சிந்தித்து ஓதுவது ஒரு சுன்னத்தாகும்.

அல்லாஹ்வின் கேள்விக்குப் பதில் அளித்த நபி (ஸல்)

(அனைவரையும்) சூழ்ந்து கொள்ளக்கூடிய (மறுமையைப் பற்றிய) செய்தி உமக்குக் கிடைத்ததா? (88:1) என்ற வசனத்தை ஒரு பெண்மணி ஓதுவதை நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அப்போது அவர்கள்: “ஆம், நிச்சயமாக அது எனக்கு கிடைத்தது” என்று பதிலளித்தார்கள்.

தப்ஸீர் இப்னு கஸீர்

குர்ஆனிற்குப் பதில் சொல்லாததை நபி (ஸல்) விரும்பவில்லை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு ‘ஸூரத்துர் ரஹ்மான்’ ஓதிக் காட்டினார்கள். அவர்கள் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜின்னுக்கான இரவில் நான் ஜின்களுக்கு இதனை ஓதிக் காட்டினேன்; அவர்கள் உங்களை விடச் சிறந்த முறையில் பதில் அளித்தார்கள். நான் ‘உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனை நீங்கள் பொய்ப்பிப்பீர்கள்?’ என்ற வசனத்தை ஓதும்போதெல்லாம், அவர்கள் ‘எங்கள் இறைவா! உன்னுடைய அருட்கொடைகளில் எதனையும் நாங்கள் பொய்ப்பிக்க மாட்டோம்; உனக்கே புகழனைத்தும் உரியது’ என்று கூறினார்கள்.

திர்மிதி # 3291

குர்ஆனைக் கேட்கும்போது மௌனமாக இல்லாமல், அதற்கேற்பப் பதில் அளிப்பதன் முக்கியத்துவத்தை இந்த ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது.

குர்ஆன் உங்கள் உள்ளத்தைத் தொடவேண்டும்

குர்ஆன் நெடுகிலும் அல்லாஹ் உங்களை பார்த்து கேள்விகளை எழுப்புகிறான்.

“நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?”

“நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்களா?”

“உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்ப்பிப்பீர்கள்?”

இது போன்ற அல்லாஹ் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் தர வேண்டும் என்பது தான் எதிர்ப்பார்ப்பு.

குர்ஆனுடன் ஆரோக்யமான தொடர்பிற்கான அடையாளங்கள்

  • வசனங்களின் பொருளைப் புரிந்து கொள்ள நிறுத்தி நிதானமாக ஓதுதல்
  • அருட்கொடை பற்றி சொல்லும் வசனங்கள் ஓதும் போது துஆ செய்தல் 
  • எச்சரிக்கை வசனங்கள் ஓதும் போது பாதுகாப்புத் தேடுதல்
  • ஓதியதை வாழ்க்கையில் செயல்படுத்தத் தொடங்குதல்

இன்றே தொடங்கலாம்….

  • அவரசமாக ஓதாமல் நிறுத்தி நிதானமாக ஓதுங்கள்.
  • தினமும் ஒரு வசனத்தின் பொருளைப் புரிந்து கொள்ளுங்கள்.
  • உங்கள் உள்ளத்தை வருடும் வசனங்களை மீண்டும் மீண்டும் ஓதுங்கள்.
  • ஓதும்போது துஆ செய்யுங்கள்.

முடிவுரை

அல்லாஹ் குர்ஆனில் உங்களோடு பேசுகிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் குர்ஆனுடன் உரையாடும்போது, அது உங்கள் உள்ளத்தை, வழிபாடுகளை மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையையே மாற்றியமைக்கும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

குர்ஆனுக்குப் பதிலளிப்பது என்றால் என்ன?

வசனங்களைச் சிந்திப்பது, துஆ செய்வது, அதன் தாக்கத்தை உள்ளத்தால் உணர்வது, அதன் வழிகாட்டுதலின்படி நடப்பது, இவையெல்லாம் குர்ஆனுக்குப் பதிலளிப்பதில் சேரும்.

எனக்கு அரபு மொழி தெரியாது, நான் எப்படி குர்ஆனுக்குப் பதிலளிக்க முடியும்?

மொழிபெயர்ப்பைப் படிப்பதன் மூலமும், நீங்கள் ஓதும் அல்லது கேட்கும் வசனங்களின் பொருளைப் புரிந்துகொள்வதன் மூலமும் நீங்கள் குர்ஆனுக்குப் பதிலளிக்கலாம்.

ரமலான் மாதத்தில் குர்ஆன் தொடர்பு ஏன் முக்கியமானது?

ரமலான் குர்ஆன் அருளப்பட்ட மாதம். குர்ஆனுடன் ஆழமான உறவை ஏற்படுத்திக் கொள்ள இதுவே சிறந்த நேரம்.

மேலும் படிக்க

WHAT OTHERS ARE READING

Most Popular