முஸ்லிம் நாடுகளில் இந்துக்களுக்கு உரிமை கிடையாதா?

குர்ஆனும் நபிகளாரின் போதனைகளும், முஸ்லிம் நாட்டில் முஸ்லிமல்லாதவர்களுக்கு உரிமைகளும், மதச் சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும் என்பதையும், அனைத்து மதத்தவர்களின் கண்ணியமும் வழிபாட்டுத் தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றன.

முன்னுரை

 
முஸ்லிம் நாடுகளில் சிறுபான்மையாக வாழும் குடிமக்களுக்கு, குறிப்பாக இந்துக்களுக்கு, உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற தவறான கருத்து உள்ளது. முஸ்லிம் நாடுகளில் வாழும் இந்துக்களுக்கு  உரிமைகள் மறுக்கப்படுவதால், இந்திய முஸ்லிம்கள் சம உரிமைகளைக் கேட்கக்கூடாது என்று சிலர் விஷமப் பிரச்சாரம் செய்கின்றனர். உண்மை என்ன? வாருங்கள் பார்ப்போம்.

உலக மனித உரிமை ஒப்பந்தங்கள்

இந்தோனேசியா, மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பல முஸ்லிம் நாடுகள், மத சுதந்திரம் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யும் இரண்டு முக்கிய ஐ.நா. ஒப்பந்தங்களான மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் (UDHR)  மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) ஆகியவற்றில் கையெழுத்திட்டுள்ளன. இந்த சர்வதேச ஒப்பந்தங்கள் மூலம், இந்துக்கள் மற்றும் பிற முஸ்லிம் அல்லாதவர்களின் உரிமைகளை வழங்க முஸ்லிம் நாடுகள் உறுதி அளித்துள்ளன.

மலேசியா, இந்தோனேசியா

உலகில் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கும் நாடு இந்தோனேசியா. இந்தோனேசியாவில் சுமார் 1.7% இந்துக்கள் குடிமக்களாக உள்ளனர். மற்றொரு முஸ்லிம் பெரும்பான்மை நாடான மலேசியாவில் 6.3% இந்துக்கள் குடிமக்களாக உள்ளனர். இந்த இரு நாடுகளிலும், முஸ்லிம்களும் இந்துக்களும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். உலகின் மிக அழகான கோயில்கள் பல மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் தான் காணப்படுகின்றன.

மலேசியாவில் நடைபெறும் தைப்பூச திருவிழா ஊர்வலம் உலகப் புகழ் பெற்றது. தைப்பூசத்தை ஒரு தேசிய விடுமுறை நாளாக மலேசியா அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மலேசியாவில் தைப்பூச திருவிழா

பிள்ளையார் படத்துடன் ரூபாய் நோட்டைக் கூட ஒரு முறை இந்தோனேசியா அச்சடித்துள்ளது.

இந்துக்களுக்கான தனிநபர் சட்டங்கள்

இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் உள்ள இந்துக்களுக்கு அவர்களின் மத நம்பிக்கைப்படி திருமணம், விவாகரத்து செய்து கொள்ள தனிநபர் சட்டங்கள் உள்ளன. முஸ்லிம் அல்லாத குடிமக்களுக்கு முஸ்லிம் நாடுகள் உரிமைகளையும், மத சுதந்திரத்தையும் வழங்குகின்றன என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

  • இந்தோனேசியா: இந்து தர்ம கவுன்சில் இந்துக்களுக்கான திருமணம் மற்றும் குடும்பச் சட்டங்களை வழங்குகிறது.
  • மலேசியா: இந்து அறக்கட்டளை வாரியம் கோயில்கள் மற்றும் மத அறக்கட்டளைகளை நிர்வகிக்கிறது. இந்து திருமணங்கள் மலேசிய அரசால் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இந்து பழக்கவழக்கங்களைப் பின்பற்றி நடக்கின்றன.

மலேசியா அல்லது இந்தோனேசியாவில் வாழும் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் மதக் கலவரங்கள் நடப்பதில்லை. இந்தியாவில் “ஜெய் ஸ்ரீ ராம்” சொல்லு என்று முஸ்லிம்களை சிலர் வற்புறுத்துவது போல், “அல்லாஹு அக்பர்” சொல்லு என்று அங்கு வாழும் இந்துக்களை எந்த முஸ்லிமும்  வற்புறுத்தவதில்லை. அங்குள்ள கோயில்களை எந்த முஸ்லிமும் தாக்குவதில்லை.

இந்துக்கள் எல்லா உரிமைகளோடு, சுதந்திரத்தோடு முஸ்லிம்களுடன் இணக்கமாக வாழ்கிறார்கள் என்பதற்கு இதுவே சான்று.

வளைகுடா நாடுகள்

வளைகுடா நாடுகளில் கூட, இந்துக்கள் தங்கள் மத நம்பிக்கையை சுதந்திரமாகப் பின்பற்றுகிறார்கள். உதாரணமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துபாய் மற்றும் அபுதாபியில் கோயில்கள் உள்ளன.

சவுதி அரேபியா

விமர்சனம் செய்பவர்கள் பெரும்பாலும் சவுதி அரேபியாவை மேற்கோள் காட்டுவார்கள். இங்கு ஒரு உண்மையை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். சவுதி அரேபியாவை பின்பற்ற வேண்டும் என்று குர்ஆன் சொல்லவில்லை. சவுதி அரேபியா செய்வதெல்லாம் இஸ்லாமும் இல்லை. நேபாள நாட்டின்  சட்டங்கள் எப்படி இந்து மதத்தின் சட்டங்கள் ஆகாதோ, அதே போல் சவுதி அரேபியாவின் சட்டங்களும்  இஸ்லாத்தின் சட்டங்கள் ஆகாது.

சவுதி அரேபியாவில் வாழும் குடிமக்கள் அனைவரும் முஸ்லிம்களாக உள்ளனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குடிமக்களுக்கு வழங்கும் சலுகைகளையும், உரிமைகளையும் எந்த நாடும் அங்கு வசிக்கும் பிற நாட்டவர்களுக்கு வழங்காது. உதாரணமாக: இந்தியாவில் வாழும் வெளிநாட்டவர் தனது சொந்த பெயரில் நிலம் வாங்க முடியாது. இந்திய நாட்டின் சட்டம் வெளிநாட்டவர்களின் உரிமைகளை பறிக்கிறது என்று இதை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

அதே போல், சவுதி அரேபியாவில் உள்ள குடிமக்களுக்கும், வெளிநாட்டினருக்கும் சட்டங்கள் வேறுபடுகின்றன. உதாரணமாக: இந்தியாவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம், சவுதியில் நிலம் வாங்கவோ அல்லது மசூதி கட்டவோ முடியாது. இதிலிருந்து, சவுதியின் சட்டங்கள் மதத்தை அடிப்படையாகக் கொண்டவை அல்ல, மாறாக அவை  தேசியக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

முஸ்லிமல்லாதவர்களின் உரிமைகளை பற்றி இஸ்லாம்

முஸ்லிம் நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத குடிமக்களுக்கு உரிமைகளையும், மத சுதந்திரத்தையும் இஸ்லாம் வழங்குகிறது.

இறுதி இறைத்தூதர் முஹம்மது  (அவரின் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும்) கூறினார்கள்:

அறிந்து கொள்ளுங்கள்!  முஸ்லிம் ஆட்சியின் கீழ் வாழும் முஸ்லிமல்லாதவர்களை யார் கொடுமைப்படுத்துகிறாரோ, அவர்களின் உரிமைகளை பறிக்கிறாரோ, அவர்கள் மீது தாங்கமுடியாத சுமையை சுமத்துகிறாரோ, அவர்களின் விருப்பமில்லாமல் அவர்களிடமிருந்து எதையும் எடுத்துக் கொள்கிறாரோ, அவருக்காக (முஸ்லிமல்லாதவர்களுக்கு ஆதரவாக) நான் (இறைத்தூதர் முஹம்மது)  நியாயத் தீர்ப்பு நாளில் (இறைவனிடத்தில்) வாதாடுவேன். 

அபு தாவூத் # 3052

ஒரு முஸ்லிம் நாட்டில் வாழும் முஸ்லிமல்லாதவர்களை நீதமாகவும், கண்ணியமாகவும் நடத்துவதன் முக்கியத்துவத்தை இந்த நபிமொழி நமக்கு எடுத்துக்காட்டுகிறது. முஸ்லிம் ஆட்சியாளர்கள் தங்கள் நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத குடிமக்களின் நலனையும், உரிமைகளையும் பாதுகாப்பது அவர்களின் கடமை என்பதையும் நம்மால் உணர முடிகிறது.

சிறுபான்மையினருக்கு அநியாயம் செய்யாதே!

 
கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வந்த ஏமன் நாட்டின் ஆளுநராக முஆத் என்பவரை நபி  அவர்கள் நியமித்தார்கள். அவரை ஏமன் நாட்டிற்கு அனுப்பியபோது, ​​அவருக்கு நபியவர்கள் இவ்வாறு அறிவுரை கூறினார்கள்:

அக்கிரமத்திற்கு உள்ளானவரின் சாபத்திற்கு பயந்து கொள்ளுங்கள். ஏனெனில், அந்த சாபத்திற்கும் இறைவனுக்கும் இடையே எந்தத் தடுப்பும் இல்லை (அதாவது, பாதிக்கப்பட்டவரின் சாபத்தை கடவுள் ஏற்றுக்கொள்வார் என்பதால் சிறுபான்மையினர் தானே என்று எண்ணி அக்கிரமம் செய்து விடாதீர்கள்.) 

புகாரி # 2448

சிறுபான்மையினர் மீது அடக்குமுறை செய்வது  தடைசெய்யப்பட்டுள்ளது என்பதையும், அநீதி இழைக்கப்பட்டவரின் பிரார்த்தனைக்கு கடவுள் பதிலளிக்கிறார் என்பதையும் நபிகளாரின் எச்சரிக்கை நமக்கு தெளிவுபடுத்துகிறது.

நபிகளாரின் முன்மாதிரி


நபி அவர்கள் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பற்றிப் பேசியது மட்டுமல்லாமல், அவற்றை தன் ஆட்சியில் நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள். நபிகளாரின் ஆட்சியில், ​​ சிறுபான்மையினராக இருந்த யூதர்கள், முழு சுதந்திரத்தோடு வாழ்ந்தனர். நபி அவர்களே தன் ஆட்சியின் கீழ் வாழ்ந்த ஒரு யூதரிடத்தில், தன் கவசத்தை அடகு வைத்து கோதுமையை கடனாக வாங்கினார்கள்.

தம் போர்க் கவசம் கோதுமைக்குப் பகரமாக ஒரு யூதரிடம் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் இறைத்தூதர் அவர்கள் இறந்தார்கள்.

புகாரி # 2916

இந்த சம்பவத்தின் மூலம் இஸ்லாமிய ஆட்சியில், முஸ்லிமல்லாத குடிமக்கள் பெற்றிருந்த சுதந்திரத்தைப் பற்றி நாம் அறியலாம்.

வழிபாட்டுத்தலங்களை இடிக்கக் கூடாது

எல்லா மத வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று குர்ஆன் கட்டளையிடுகிறது.

மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை இறைவன் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும், இறைவனின் பெயர் அதிகமாக நினைவு செய்யப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.

குர்ஆன் அத்தியாயம் 22 வசனம் 40

முஸ்லிமல்லாதவர்களின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை இந்த இறைவசனம் தெளிவுபடுத்துகிறது. இந்த இறைகட்டளைகளை மீறும் முஸ்லிம் நாடுகள், இஸ்லாத்தின் போதனைகளுக்கு எதிராகச் செயல்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

முடிவுரை

இந்தோனேசியா, மலேசியா, வளைகுடா நாடுகள் போன்ற  முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் இந்துக்கள் அமைதியாக வாழ்வது மட்டுமல்லாமல், மத சுதந்திரத்தையும் அனுபவிக்கிறார்கள். குர்ஆனும் நபிகளாரின் போதனைகளும், முஸ்லிம் நாட்டில் முஸ்லிமல்லாதவர்களுக்கு உரிமைகளையும், மத சுதந்திரத்தையும் வழங்குகின்றன. அனைத்து மதத்தவர்களின் கண்ணியத்தையும், உரிமைகளையும், வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாப்பது முஸ்லிம் ஆட்சியாளர்களின் கடமை என்பதை  வலியுறுத்துகின்றன.

மேலும் படிக்க

“காஃபிர்” என்பது இழிவான சொல்லா? இந்துக்களை காஃபிர் என்று கூறி குர்ஆன் இழிவுபடுத்துகிறதா? Is Quran abusing Hindus by calling them Kafir? Curious Hats

“காஃபிர்” என்பது இழிவான சொல்லா? இந்துக்களை காஃபிர் என்று கூறி குர்ஆன் இழிவுபடுத்துகிறதா?

WHAT OTHERS ARE READING

Most Popular