முதியோர் இல்லங்களுக்கு குர்ஆனின் தீர்வு

இந்தியாவில் சுமார் 13.8 கோடி முதியோர்கள் உள்ளனர். இந்தியாவில் 1.8 கோடி வீடற்ற முதியோர்கள் இருப்பதாக ஒரு அறிக்கை மதிப்பிடுகிறது. முதியோர் இல்லங்கள் அதிகரிப்பதை குறைக்க குர்ஆனிலிருந்து ஒரு அற்புதமான தீர்வு.

இந்தியாவில் கிட்டத்தட்ட 13.8 கோடி முதியோர்கள் வாழ்கிறார்கள். இதில் பல இலட்சம் முதியோர்கள் எந்தவித  கவனிப்பும், ஆதரவும் இல்லாமல் தவிப்பதாக சமீபத்திய ரிப்போர்ட் தெரிவிக்கிறது. நம் சமூகத்தில் பெருகி வரும் முதியோர் இல்லங்களுக்கு, இறைவேதமான குர்ஆன் காலத்தால் அழியாத, அற்புதமான தீர்வை தருகிறது.

முதியோர் இல்லங்களுக்கு குர்ஆனின் தீர்வு

பெருகி வரும் முதியோர் இல்லங்கள்

அதிகரித்து வரும் சுயநல மனப்பான்மையும், பலவீனமாகும் குடும்ப உறவுகளும் முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருவதற்கு காரணமாக அமைகின்றன. பலர் தங்கள் வயதான பெற்றோரை கைவிட்டு விடுகிறார்கள் அல்லது முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுகிறார்கள். செல்வம் படைத்தவர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கி, அங்கே தங்கள் பெற்றோரை அனாதைப் போல் தனியாக வாழ வைத்து விடுகிறார்கள்.

இதற்கெல்லாம் என்ன தீர்வு?

குர்ஆனின் வழிகாட்டுதல்

‘இறைவனைத் தவிர வேறெவரையும் நீங்கள் வணங்காதீர்கள். தாய் தந்தையரிடம் மிகச் சிறந்த முறையில் நடந்துகொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமை அடைந்த நிலையில் உங்களோடு இருந்தால், எரிச்சலை வெளிப்படுத்தும் வகையிலோ அல்லது கடிந்தோ அவர்களிடம் பேசாதீர்கள். அவர்களை விரட்டி விடாதீர்கள்! அவர்களிடம் மரியாதையான முறையில் பேசுங்கள்!’ என்று இறைவன் கட்டளையிட்டுள்ளான்.

திருகுர்ஆன் 17:23

நமது பெற்றோரைப் பராமரிப்பது என்பது நாம் கடவுளை வணங்குவதோடு நேரடியாக தொடர்புடைய விஷயம் என்று குர்ஆன் சொல்கிறது. குர்ஆனில், கடவுள் தன்னை மட்டுமே வணங்க வேண்டும் என்ற கட்டளையை சொன்ன பிறகு, பெற்றோரை மதிக்கவும், நேசிக்கவும், பராமரிக்கவும் வேண்டும் என்று கட்டளையிடுகிறார். பெற்றோரின் உரிமைகள், கடவுளின் உரிமைகளுக்கு அடுத்தபடியாக வருகின்றது என்பதை இது உணர்த்துகிறது. பெற்றோர் உறவைப் போல் வேறு எந்த உறவுக்கும், இவ்வளவு மகத்தான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

அன்பும் அக்கறையும் உள்ள பணிவு என்னும் சிறகுகளை அவர்களுக்காக தாழ்த்துங்கள்.

திருகுர்ஆன் 17:24

“சிறகுகளைத் தாழ்த்து” என்பதன் அர்த்தம் என்ன?

மேலே நாம் சுட்டிக்காட்டிய வசனம், ‘சிறகுகளைத் தாழ்த்துங்கள்’ என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்துகிறது. இதை தெளிவாக புரிந்து கொள்ள, நாம் ஒரு தாய்ப் பறவையை நாம் கவனிக்க வேண்டும்.

சிறகுகளை தாழ்த்தும் தாய் பறவை

​​தாய்ப் பறவை, சிறியதாகவும், பலவீனமாகவும் இருக்கும் தன் குஞ்சுகளை பாதுகாக்க, தன்னுடைய சிறகுகளை அவற்றின் மீது தாழ்த்துகிறது.

நீங்கள் சிறியவர்களாக இருந்தபோது..

பறவை குஞ்சுகளைப் போலவே, நாமும் குழந்தைகளாக இருந்தபோது பலவீனமாக இருந்தோம்.

நம் பெற்றோர்:

  • நமக்கு உணவளித்தார்கள்
  • நம்மை பாதுகாத்தார்கள்
  • நம் நலனுக்காக தங்கள் உறக்கத்தை இழந்தார்கள்

தாய்ப் பறவை தன் குஞ்சுகளை சிறகுளை தாழ்த்தி அரவணைப்பது போல், நம் பெற்றோர்கள், நம்மை அன்பால் அரவணைத்தனர்.

இறைவன் எடுத்துக்காட்டும் இந்த சக்திவாய்ந்த உவமை, நமக்கு சில உண்மைகளை உணர்த்துகிறது.

👉 சிறியவர்களாக இருந்தபோது, ​​நம் பெற்றோர் நம்மை பராமரித்தனர்.

👉 நம் மீது அன்பு என்ற “சிறகுகளை” தாழ்த்தினர்.

👉 பெற்றோர் முதியவர்களாகும் போது, அதே அன்பும், பராமரிப்பும் அவர்களுக்கும் தேவைப்படுகிறது.

இதை உணரும் எவரும், தங்கள் வயதான பெற்றோருக்கு அவர் செய்ய வேண்டிய கடமையை ஒருபோதும் மறக்க மாட்டார்.

வயதான பெற்றோரை மறவாதீர்…

பெற்றோர்கள் வயதாகும்போது, பலவீனமாகி விடுகிறார்கள். அவர்களுக்கு ஆதரவும், ஆறுதலும் தேவைப்படுகிறது. பெற்றோர்களோடு கண்ணியத்தோடும், அன்போடும், புரிதலோடும் நடந்து கொள்ள வேண்டும் என்று இறைவன் கற்றுத் தருகிறார்.

இறைவன் கற்றுத் தரும் பிரார்த்தனை

ஒவ்வொருவரும் தங்கள் பெற்றோருக்காக, இந்த அற்புதமான பிரார்த்தனையைச் செய்ய வேண்டும் என்று இறைவன் கற்றுத் தருகிறார்.

‘என் இறைவா, நான் சிறு குழந்தையாக இருந்த போது, என்னை அவர்கள் அன்போடும், அக்கறையோடும் வளர்த்தது போல், நீயும் அவர்களுக்கு அன்பையும், கருணையையும் காட்டுவாயாக!’ என்று பிராத்தனை செய்யுங்கள்.

திருகுர்ஆன் 17:24

இந்த பிராத்தனையை நாம் செய்யும் போது:

  • பெற்றோர்களின் தியாகங்களை நம் நினைவிற்கு வரும்
  • நம் உள்ளம் மென்மையாகும்
  • பெற்றோர் மீதுள்ள அன்பு அதிகரிக்கும்
  • இறைவனின் அருளை பெற்று தரும்

இந்த பிராத்தனையை தொடர்ந்து செய்யும் ஒருவருக்கு, இயல்பாகவே தங்கள் பெற்றோரின் மீது அன்பும், நன்றியுணர்வும் ஏற்படும்.

முதியோர் இல்லங்களுக்கு தீர்வு…

இறைவன் கூறும் உவமையின் ஆழத்தை ஒருவர் உணர்ந்தால்…

இறைவன் கற்றுத் தரும் பிராத்தனையை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால்…

தங்கள் வயதான பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்புவார்களா?அடுக்குமாடி குடியிருப்புகளில் அனாதைகளைப் போல வசிக்க விட்டுவிடுவார்களா?

நிச்சயமாக அப்படி செய்ய மாட்டார்கள்!

முடிவுரை

நமது பெற்றோரை பராமரிப்பது வெறும் கடமை மட்டுமல்ல, அது நம் அன்பையும், நன்றியையும் வெளிப்படுத்தும் ஒரு நற்செயல் என்பதை குர்ஆன் அழகாக நமக்கு நினைவூட்டுகிறது.

நமது பெற்றோர் நமக்காக தங்கள் இறக்கைகளைத் தாழ்த்தினார்கள்.

நாம் அவர்களுக்காக நம் இறக்கைகளைத் தாழ்த்துவோம்.

மேலும் படிக்க

“காஃபிர்” என்பது இழிவான சொல்லா? இந்துக்களை காஃபிர் என்று கூறி குர்ஆன் இழிவுபடுத்துகிறதா? Is Quran abusing Hindus by calling them Kafir? Curious Hats

“காஃபிர்” என்பது இழிவான சொல்லா? இந்துக்களை காஃபிர் என்று கூறி குர்ஆன் இழிவுபடுத்துகிறதா?

WHAT OTHERS ARE READING

Most Popular