பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களது ஜகாத்தை ரமலான் மாதத்தில் கொடுக்கவே விரும்புகிறார்கள். ஆனால் இந்த ஆண்டு, தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும் போது, அதற்காக வழங்கப்பட வேண்டிய ஜகாத் தொகையும் அதிகரிக்கிறது.
சரியான ஜகாத் தொகையைக் கணக்கிட்டு கொடுப்பது நமது மனதிற்கு (நப்ஸ்) பாரமாகத் தோன்றலாம். உணவு உண்ணாமல், நீர் பருகாமல், இச்சைகளை அடக்கி நமது நப்ஸை பக்குவப்படுத்தும் பயிற்சியை தான் நாம் ரமலானில் நோன்பாக செய்கிறோம்.
உண்மையிலேயே நம் நப்ஸ் பக்குவப்பட்டதா இல்லையா என்பது, நாம் ஜகாத் கொடுப்பதில் தெரிந்து விடும்.
அல்லாஹ்வின் கருணையை நீங்கள் விரும்பினால்..
அல்லாஹ் அவனது எல்லையில்லா கருணையை, தக்வாவோடும் ஜகாத்தோடும் இணைத்துக் கூறுகிறான்.
‘எனது கருணை, எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறது. தக்வாவோடு நடந்து, ஜகாத்தும் கொடுத்து, நமது வசனங்களை நம்புகின்ற மக்களுக்காக அதை வழங்குவேன்.‘ என்று (இறைவன்) கூறினான்.
குர்ஆன் 7:156
அல்லாஹ்வின் கருணை எல்லையற்றது. அது அனைத்தையும் சூழ்ந்திருக்கிறது. ஆனால் அந்த கருணை கிடைப்பது எல்லோருக்கும் அல்ல. அது யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
- தக்வா உடையவர்கள்.
- ஜகாத் கொடுப்பவர்கள்.
ரமலான் அல்லாஹ்வின் கருணையை நாம் அதிகமாக பெறும் மாதம். அல்லாஹ்வின் கருணை தக்வா உடையவர்களுக்கும் ஜகாத்தை சரியாக கொடுப்பவர்களுக்குத் தான் கிடைக்கிறது.
குர்ஆனுக்கு ஒரு முஸ்லிம் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றி அறிய, இங்கே கிளிக் செய்யவும்.
ஜகாத் செல்வத்தையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்துகிறது
அல்லாஹ் கூறுகிறான்:
அவர்களின் செல்வங்களில் ஜகாத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமாக்குவீராக!
குர்ஆன் 9:103
“ஜகாத்” என்ற சொல்லின் பொருள் “தூய்மைப்படுத்துதல்” மற்றும் “வளர்ச்சி அளித்தல்” என்பதாகும்.
ஜகாத் என்பது வெறும் பண பரிமாற்றம் அல்ல. அது ஒரு தூய்மைப்படுத்தும் நற்செயல் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். நீங்கள் ஜகாத்தை சரியாகக் கொடுக்கும்போது, உங்கள் செல்வம் சுத்தமாகிறது. உங்கள் வாழ்வாதாரத்தில் அல்லாஹ்வின் பரக்கத் (அபிவிருத்தி) கிடைக்கிறது. அதன் மூலம் உங்கள் செல்வம் வளர்ச்சியடையும்.
நாம் நோன்பு நோற்பது நம் உடலையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்துகிறது; ஜகாத் நம் செல்வத்தைத் தூய்மைப்படுத்துகிறது.
தங்கம் விலை உயர்வும் ஒரு சோதனை தான்
தங்கத்தின் விலை அதிகரிக்கும் போது, நாம் வைத்திருக்கும் தங்கத்திற்காக நாம் கொடுக்கும் ஜகாத் பணமும் அதிகரிக்க வேண்டும். அதிகமான ஜகாத் தொகையை கொடுக்க மனது வலிக்கலாம். அதனால் ஜகாத் தொகையை கணக்கிட:
- பழைய தங்க விலையைப் பயன்படுத்துதல்
- குத்து மதிப்பாக ஒரு சாதகமான விலையை நிர்ணயித்தல்
- தங்கத்தின் அளவை குறைத்து கணக்கிடுதல்
- ஜகாத் தொகையை கணக்கிடுவதைத் தாமதப்படுத்துதல்
- ஜகாத் தொகையைக் குறைக்க நமக்கு சாதகமான ‘ஃபத்வாக்களைத்’ தேடுதல்
போன்ற செயல்களை செய்ய நம் நப்ஸ் நம்மை தூண்டலாம்.
ஆனால், நாம் கொடுக்க வேண்டிய ஜகாத் தொகையை அல்லாஹ் நன்கறிவான். நம்மால், அல்லாஹ்வை ஏமாற்ற முடியாது. நாம் நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோம்.
நோன்பின் மூலம் தக்வாவை அடைய முயலும் நாம், ஜகாத் தொகையை சரியாக கொடுக்காமல் தக்வாவை எப்படி அடைய முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.
ஜகாத் வழங்காதவர்களுக்குக் கடும் எச்சரிக்கை
நபி ﷺ அவர்கள் எச்சரித்தார்கள்:
அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தைக் கொடுத்து, அவன் அதற்கான ஜகாத்தை கொடுக்கவில்லையென்றால், கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கடித்து, ‘நானே உன் செல்வம். நானே உன் புதையல்’ என்று கூறும். இதை சொல்லிவிட்டு 3:180 வசனத்தை நபி (ஸல்) ஓதிக் காட்டினார்கள்.
புகாரி # 1403
ஜகாத் மூலம் தூய்மைப்படுத்தப்படாத செல்வம், அந்த நபருக்கு மறுமை நாளில் தண்டனையாக மாறும் என்ற உண்மையை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
ஜகாத் செல்வத்தைக் குறைக்காது
அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ் வட்டியினை அழித்து விடுகிறான்; தர்மங்களை (ஜகாத்தை) வளரச் செய்கிறான்.
குர்ஆன் 2:276
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
தர்மம் செய்வது செல்வத்தைக் குறைக்காது.
ஸஹீஹ் முஸ்லிம் # 2588
ஜகாத் உங்கள் செல்வத்தைக் குறைக்காது. மாறாக, ஜகாத் உங்கள் செல்வத்தைப் பாதுகாக்கிறது.
விபத்தோ, புற்றுநோயோ ஏற்பட்டால்…
ஜகாத்தை குறைவாகக் கொடுப்பதன் மூலம் நீங்கள் பணத்தைச் சேமிப்பதாக நினைக்கலாம். ஆனால், உங்கள் ரிஸ்க் (வாழ்வாதாரம்) அல்லாஹ்வின் கையில் உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்.
நீங்கள் ஜகாத்தை குறைவாக கொடுத்து “சேமிப்பதாக” நினைக்கும் பணம், உங்களுக்கு:
- பெரிய விபத்து ஏற்பட்டு, மருத்துவ செலவாய் கரைந்து போகலாம்
- புற்றுநோய் போன்ற மோசமான நோய் ஏற்பட்டு அவதிப்படலாம்
- நீங்கள் நேசிக்கும் ஒருவரின் மரணம் மூலம் மன உளச்சல் ஏற்படலாம்
இத்தகைய சோதனைகளிலிருந்து அல்லாஹ்வைத் தவிர உங்களை யாரால் காப்பாற்ற முடியும்?
உங்களை பாதுகாத்து, ரிஸ்க் தரும் அல்லாஹ்விடமே உங்கள் கஞ்சத்தனத்தை காட்டுவீர்களா?
ஜகாத்தை குறைவாகக் கொடுத்து நீங்கள் ‘சேமிப்பதாக’ நினைக்கும் பணம், வேறு வழியில் உங்களை விட்டுச் செல்லக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஜகாத்தை சரியாகக் கொடுப்போம்
தக்வாவோடு நடந்து, ஜகாத்தை சரியாக கொடுங்கள்.
- ‘நிசாப்’ (ஜகாத் கடமையாகும் அளவு) வரம்பை எட்டிவிட்டீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
- தற்போதைய தங்கத்தின் விலையை ஜகாத்தை கணக்கு செய்ய பயன்படுத்துங்கள்
- ஜகாத் தொகையை சரியாகக் கணக்கிடுங்கள்
- ஜகாத் கணக்கிடுவதில் குறுக்கு வழிகளைத் தவிருங்கள்
- ஜகாத்தை தாமதிக்காமல் உடனடியாக கொடுத்து விடுங்கள்
முடிவுரை
சரியாக ஜகாத் கொடுப்பது தக்வாவிற்கான அடையாளம். அல்லாஹ் தனது கருணையை தக்வா உடையவர்களுடனும் ஜகாத் கொடுப்பவர்களுடனும் இணைக்கிறான் (7:156).
அல்லாஹ்வின் கருணையைத் தேடும் இந்த ரமலான் மாதத்தில், ஜகாத் கடமையை நாம் சரியாக நிறைவேற்ற வேண்டும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
7:156 வசனம் ஜகாத்தையும் தக்வாவையும் எப்படி இணைக்கிறது?
தக்வா உடையவர்களுக்கும் ஜகாத் கொடுப்பவர்களுக்கும் அல்லாஹ்வின் கருணை கிடைக்கும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
தங்க விலை உயர்வினால் ஜகாத் தொகை அதிகரிக்குமா?
ஆம். தங்கத்தின் தற்போதைய சந்தை விலையின் அடிப்படையிலேயே ஜகாத் தொகை கணக்கிடப்பட வேண்டும்.
ஜகாத் வழங்காதவருக்கு மறுமையில் என்ன தண்டனை?
ஜகாத் வழங்காமல் சேமித்து வைக்கப்பட்ட செல்வம் மறுமையில் ஒரு பாம்பாக மாறி, அவரை கடித்து துன்புறுத்தும் என்று நபி ﷺ எச்சரித்துள்ளார்கள். (புகாரி # 1403)
ஜகாத் கொடுப்பது செல்வத்தைக் குறைக்குமா?
இல்லை. ஜகாத் கொடுப்பதால் செல்வம் குறையாது என்று நபி ﷺ உறுதியளித்துள்ளார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் # 2588)
ஜகாத் என்ற சொல்லின் பொருள் என்ன?
ஜகாத் என்றால் “தூய்மைப்படுத்துதல்” மற்றும் “வளரச் செய்தல்” என்று பொருள்.
இந்த நினைவூட்டல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், இதைப் பகிருங்கள். உங்கள் மூலம் ஒருவர் தனது ஜகாத்தைச் சரியாகச் செலுத்தினால், அது உங்களுக்கும் நிலையான நன்மையாக (ஸதக்கத்துல் ஜாரியாவாக) அமையும்.
