முன்னுரை
எப்ஸ்டீன் ஃபைல்ஸ் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உலக வாழ்வில் முழுமையான நீதி கிடைக்காது என்பதை எப்ஸ்டீன் ஃபைல்ஸ்கள் நமக்கு உணர்த்துகின்றன.
அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள் என பலருடைய பெயர்கள் இந்த எப்ஸ்டீன் ஃபைல்ஸ்களில் இடம்பெற்றுள்ளன. பலருடைய மனதில் எழும் கேள்விகள் இதுதான்:
நீதி கிடைக்குமா?
தவறு செய்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்களா?
இந்த வழக்கில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் அவரது உதவியாளர் கிஸ்லேன் மேக்ஸ்வெல் ஆகிய இருவர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆவணங்களில் பெயர்கள் வெளியான பிரபலங்களின் நிலை என்ன? அவர்கள் மீது விசாரணை நடத்தப்படுமா? அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்களா? தண்டிக்கப்படுவார்களா?
குறிப்பு: ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார், எப்ஸ்டீன் ஃபைல்ஸ் என்றால் என்ன என்பது குறித்த சிறு விளக்கத்தை இக்கட்டுரையின் இறுதியில் கொடுத்துள்ளோம்.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவன் யார்?
அமெரிக்காவைச் சேர்ந்த இவன் ஒரு செல்வாக்கு மிக்க கோடீஸ்வரன். மைனர் பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்திய குற்றத்திற்காக இவன் தண்டிக்கப்பட்டான். உலகின் பல சக்திவாய்ந்த, பணக்கார பிரபலங்களோடு இவனுக்கு தொடர்பு இருந்தது.
எப்ஸ்டீன் ஃபைல்ஸ் என்றால் என்ன?
எப்ஸ்டீன் ஃபைல்ஸ் (Epstein Files) என்பது அமெரிக்க கோடீஸ்வரனான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்புடைய நீதிமன்ற ஆவணங்களின் தொகுப்பாகும். இக்கோப்புகளில் உலகப்புகழ் பெற்ற அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் சினிமா பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
நீதியை முடக்கும் பணமும், அதிகாரமும்
பணமும், அதிகாரமும் எப்படி நீதியை முடக்கும் என்பதை இந்த வழக்கு தோலுரித்துக் காட்டியுள்ளது. பணமும் அதிகாரமும் சட்டத்தில் தலையிடும்போது, ஆதாரங்கள் மறைகின்றன, வழக்குகள் வலுவிழக்கின்றன, சாட்சிகள் பின்வாங்குகின்றனர். காலப்போக்கில் இந்த வழக்கின் மீதான மக்களின் கவனமும் குறைந்துவிடும்.
சாதாரண மக்கள் தண்டிக்கப்படும் அதே குற்றங்களை, பணக்காரர்களும் அதிகாரம் படைத்தவர்களும் செய்யும் போது அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை என்பதே கசப்பான உண்மை. பணக்காரர்களுக்கு ஒரு நீதி, ஏழைகளுக்கு ஒரு நீதி!
இது ஒரு தொடர்கதை
எப்ஸ்டீன் வழக்கு ஒரு விதிவிலக்கு அல்ல. வரலாறு முழுவதும் தங்களின் குற்றங்களுக்குத் தண்டனையைப் பெறாத அதிகாரம் படைத்த பல மனிதர்கள் இருந்துள்ளனர்.
- ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்குக் காரணமான சர்வாதிகாரிகள் தண்டனையில்லாமல் மரணித்துள்ளனர்
- ஊழல் செய்த பல தலைவர்கள் ஒருமுறை கூட நீதிமன்றம் செல்லவில்லை
- பொருளாதாரச் சரிவுக்குக் காரணமானவர்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பித்துள்ளனர்
- பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காமலேயே போயுள்ளது
இவ்வுலகில் முழுமையான நீதி ஏன் சாத்தியமில்லை?
நீதி வழங்க நாம் இயற்றி இருக்கும் சட்டங்களில் பல ஓட்டைகள் உள்ளன. உதாரணமாக:
- ஆதாரங்களின் பற்றாக்குறை
- அரசியல் தலையீடு
- குற்றவாளிகள் அல்லது சாட்சிகளின் மரணம்
- நீதித் துறையில் ஊழல்
சாட்சிகள் இல்லாமலே பல குற்றங்கள் நடக்கின்றன. விசாரணைக்கு முன்பே குற்றவாளி இறந்து விடுகிறான். இப்படி பல காரணங்களால், இவ்வுலகில் நீதி என்பது அரைகுறையாகவோ அல்லது தாமதமாகவோ தான் கிடைக்கிறது.
நம் இதயம் நீதியை விரும்புகிறது
நல்லவர்களுக்கு நன்மையும், தீயவர்களுக்குத் தண்டனையும் கிடைக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். ஆனால் நாம் வாழும் இவ்வுலகில், நல்லவர்களுக்கு எப்போதும் நல்லது நடப்பதில்லை; தீயவர்களுக்கு எப்போதும் தீமை நடப்பதில்லை.
இவ்வுலகில் முழுமையான நீதி இல்லையென்றால், நற்செயல்கள் தன் மதிப்பை இழக்கின்றன.
தியாகங்கள் அர்த்தமற்றதாகத் தோன்றும். குற்றங்கள் செய்வது தவறில்லை என்ற எண்ணம் வரும்.
இவ்வுலகில் முழுமையான நீதி கிடைக்காது என்றால், நீதி எங்கே தான் கிடைக்கும்?
நீதி எங்கே கிடைக்கும்?
எல்லாம் அறிந்த, நீதியாளனான இறைவன், குற்றங்களைத் தண்டிக்காமல் விட மாட்டான். நம் மரணம் என்பது முடிவல்ல. முடிவில்லாத ஒரு வாழ்க்கையின் தொடக்கம்.
ஒரு நாள் இந்த உலகம் அழிந்து விடும். முதல் மனிதன் முதல் கடைசி மனிதன் வரை, அனைவரும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள். நாம் இவ்வுலகில் செய்த ஒவ்வொரு செயலுக்கும் இறைவனிடத்தில் பதில் சொல்ல வேண்டும். பணமும், அதிகாரமும் இறைவனிடத்தில் செல்லாது. யாரும் தப்ப முடியாது.
நற்செயல்கள் செய்த நல்லவர்களுக்கு பரிசாக சொர்க்கம் கிடைக்கும்.
குற்றங்களை செய்த பாவிகளுக்கு தண்டனையாக நரகம் கிடைக்கும்.
மரணத்திற்கு பின் உள்ள வாழ்க்கை நிலையானது என்பதால், இறைவன் அளிக்கும் நீதி முழுமையானதாகவும், சரியானதாகவும் இருக்கும்.
மரணத்திற்குப் பின் வாழ்வு சாத்தியமா?
திருக்குர்ஆனில் இறைவன் இதற்கு நேரடியாகப் பதிலளிக்கிறான்.
“முதல் தடவை யார் படைத்தானோ அவனே (உங்களை) உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்” என்று கூறுவீராக!
குர்ஆன் அத்தியாயம் 36 வசனம் 79
ஒரு பொருளை முதல்முறை படைப்பதுதான் கடினம். அதை மீண்டும் படைப்பது எளிது. நம்மை எந்த சிரமமும் இல்லாமல் முதல்முறை படைத்த இறைவனுக்கு, நாம் மரணித்த பிறகு மீண்டும் உயிர் கொடுப்பது மிகவும் எளிதான விஷயம்.
மரணத்திற்கு பின் வாழ்க்கை சாத்தியமா? அதை நம்புவது பகுத்தறிவா? போன்ற கேள்விகளுக்கு அறிவுப்பூர்வமான பதில்களை அறிய, இங்கே கிளிக் செய்யவும்.
முடிவுரை
மனித நீதி குறையுடையது என்பதை எப்ஸ்டீன் ஃபைல்ஸ் நமக்கு உணர்த்துகின்றன. எனவே, சரியான நீதி கிடைக்க, மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை அவசியம். மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை இல்லையென்றால், சரியான நீதி கிடைக்க வாய்ப்பேயில்லை.
