ரமலானில் செய்யப்படும் துஆவிற்கு ஒரு சிறப்பான இடத்தை குர்ஆனில் அல்லாஹ் கொடுத்துள்ளான்.
ஸூரத்துல் பகராவில், அல்லாஹ் வசனம் 183 முதல் 187 வரை நோன்பைப் பற்றிப் பேசுகிறான். நோன்பின் கடமையை சொல்லி விட்டு, அதன் நோக்கத்தையும், ரமலான் குர்ஆன் அருளப்பட்ட மாதம் என்று விளக்குகிறான்.
நோன்பைப் பற்றி சொல்லிக் கொண்டு வரும் இந்த வசனங்களுக்கு இடையில், அல்லாஹ் துஆவைப் பற்றிப் பேசுகிறான்.
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால், நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே அவர்கள் எனக்கே பதிலளிக்கட்டும் (எனக்குக் கீழ்ப்படியட்டும்). என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்.
குர்ஆன் 2:186
நோன்பை பற்றி பேசும் வசனங்களின் இடையில் துஆவை பற்றி ஏன் பேச வேண்டும்?
“நான் அருகில் இருக்கிறேன்” என்று அல்லாஹ் சொல்வதற்கும், தக்வாவிற்கும் என்ன தொடர்பு?
வாருங்கள் பார்க்கலாம்.
குர்ஆனுக்கு ஒரு முஸ்லிம் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றி அறிய, இங்கே கிளிக் செய்யவும்.
நோன்பு பற்றிய வசனங்கள்
நோன்பு பற்றி வரும் வசன தொடரை கவனமாக பார்ப்போம்.
- 2:183 — நோன்பு கடமையாக்கப்படுதல்
- 2:184 — நோன்பில் சலுகைகள்
- 2:185 — குர்ஆனும் ரமலானும்
- 2:186 — துஆ
- 2:187 — நோன்பு குறித்த சட்டங்கள்
துஆ பற்றிய வசனம் நோன்பின் வசனங்களுக்கு இடையில் வருகிறது.
நோன்பு உடலைப் பக்குவப்படுத்துகிறது. துஆ இதயத்தை மென்மையாக்குகிறது. அல்லாஹ்வோடு நேரடி தொடர்பு ஏற்படுத்துகிறது.
நோன்பின் இலக்கு தக்வா.
நோன்போடு, துஆ இணையும் போது, தக்வாவை அடைவதற்கான வழி எளிதாகிறது.
2:186 – தக்வாவுக்கும் இடையிலான தொடர்பு
2:186-ல் அல்லாஹ் “நான் அருகில் இருக்கிறேன்” என்கிறான். இதை ஆழமாக சிந்திப்போம்.
நீங்கள் ஒரு தவறு செய்யப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்…
“ஜாக்கிரதை! உன் முதலாளி கதவுக்குப் பின்னால் தான் இருக்கிறார்” என்று யாராவது உங்களிடம் சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அந்த தவறை செய்வீர்களா?
நிச்சயமாக அந்த தவறை செய்ய மாட்டீர்கள்.
‘உங்கள் முதலாளி அருகில் இருக்கிறார்’ என்ற விழிப்புணர்வு உங்கள் நடத்தையை மாற்றுகிறது.
‘அல்லாஹ் அருகில் இருக்கிறான்’ என்ற விழிப்புணர்வோடு ஒருவர் வாழும் போது:
• நீங்கள் பேசும்போது அல்லாஹ் அருகில் இருக்கிறான்
• நீங்கள் ஒரு செயலை செய்யும் போது அல்லாஹ் அருகில் இருக்கிறான்
• நீங்கள் தனிமையில் இருக்கும்போது அல்லாஹ் அருகில் இருக்கிறான்
என்ற எண்ணம் மேலோங்கி நிற்கும்.
இந்த விழிப்புணர்வைத் தான் ‘தக்வா’ என்று அழைக்கிறோம்.
இந்த விழுப்புணர்வு உங்கள் நடத்தையை மாற்றி விடும். 2:186 வசனம் இந்த விழிப்புணர்வை நமக்குள் ஏற்படுத்துகிறது. இந்த வசனம் எவ்வளவு அழகாக நோன்போடு தொடர்புபடுகிறது பாருங்கள்! சுப்ஹானல்லாஹ்!
நேரடி பதில்: “கூறுவீராக” (قُل) என்ற சொல் இல்லை
குர்ஆனின் பல இடங்களில், மக்கள் ஒரு கேள்வியைக் கேட்கும்போது அல்லாஹ் நபியவர்களிடம் ﷺ:
“قُل” — “கூறுவீராக” என்று சொல்லச் சொல்வான்.
உதாரணமாக:
அவர்கள் உம்மிடம் பிறைகளைப் பற்றிக் கேட்கிறார்கள். (நபியே!) நீர் கூறுவீராக: அவை காலத்தைக் காட்டும் அளவுகோல்கள்.
குர்ஆன் 2:189
மக்கள் நபியவர்களிடம் ﷺ கேள்வி கேட்பதும், அதற்கு அல்லாஹ் “குல் (قُل)” — “கூறுவீராக” என்று பதிலளிக்கச் சொல்வதும், குர்ஆனில் பல இடங்களில் வருகிறது. (பார்க்க: 2:215, 2:217, 2:219, 2:220, 2:222, 8:1, 17:85, 18:83, 20:105).
ஆனால் 2:186 வசனத்தில், அல்லாஹ் “குல் (قُل)” — “கூறுவீராக” என்று சொல்லவில்லை. அவனே நேரடியாகப் பதிலளிக்கிறான்.
இது அல்லாஹ்வின் நெருக்கத்தைக் காட்டுகிறது. நமக்கும் அல்லாஹ்விற்கும் இடையில் எவரும் இல்லை.
பதிலளிப்பதாக அல்லாஹ் வாக்களிக்கிறான்
பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன்.
குர்ஆன் 2:186
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் செய்யும் துஆவிற்கு… அல்லாஹ் மூன்றில் ஒன்றைக் கொடுக்கிறான். அவன் கேட்டதை உடனே வழங்குகிறான். அல்லது அவருக்காக அதை மறுமையில் தர நிறுத்தி வைக்கிறான். அல்லது அவன் கேட்டதற்கு நிகரான ஒரு தீங்கை அவரை விட்டும் அகற்றிவிடுகிறான்.
முஸ்னத் அஹ்மத் # 11133
ரமலானில் நாம் கேட்கும் ஒவ்வொரு துஆவுக்கும் அல்லாஹ் பதிலளிக்கிறான்.
ஆனால் முக்கியமான ஒரு விஷயத்தை நாம் மறந்து விடக் கூடாது.
துஆக்கள் ஏன் அங்கீகரிக்கப்படுவதில்லை?
நபி ﷺ அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்:
ஒரு மனிதன் நீண்ட தூரம் பயணம் செய்து, தலைவிரி கோலமாக, தூசு படிந்தவனாக வானத்தை நோக்கித் தன் கைகளை உயர்த்தி: ‘என் ரப்பே, என் ரப்பே’ என்று பிரார்த்தனை செய்கிறான். ஆனால் அவனது உணவு ஹராம், அவனது பானம் ஹராம், அவனது உடை ஹராம். அவனது துஆ எவ்வாறு அங்கீகரிக்கப்படும்?
ஸஹீஹ் முஸ்லிம் # 1015
இந்த ஹதீஸ் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பிக்கிறது. துஆ செய்வதால் மட்டும் பலன் கிடைக்காது.
துஆ செய்யும் முன்பு:
• ஹலாலான வருமானம்
• ஹலாலான உணவு
• அல்லாஹ்விற்கு கீழ்ப்படிதல்
• தூய்மையான எண்ணம் (நிய்யத்)
இவையெல்லாம் நம் வாழ்வில் உள்ளதா என்று சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
ரமலானில் துஆ
ரமலானிலுள்ள பரக்கத்தும், நாம் பரவலாக காணும் ஆன்மீக சூழலும், ரமலானில் நாம் செய்யும் துஆவின் தரத்தை உயர்த்துகின்றன.
ரமலானில் துஆ செய்ய சில ஆலோசனைகள்
• இஃப்தாருக்கு முன் துஆ செய்யுங்கள்.
• ஸஜ்தாவில் துஆ செய்யுங்கள். (ஸஹீஹ் முஸ்லிம் # 482)
• இரவின் கடைசிப் பகுதியில் துஆ செய்யுங்கள். (புகாரி # 1145; முஸ்லிம் # 758)
• உங்கள் துஆவில் உம்மத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். (ஸஹீஹ் முஸ்லிம் # 2732)
• உங்கள் வருமானமும் உணவும் ஹலாலாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
2:186 ம், அல்லாஹ்விற்கு கீழ்ப்படிதலும்
அல்லாஹ் கூறுகிறான்:
எனவே அவர்கள் எனக்கே பதிலளிக்கட்டும் (எனக்குக் கீழ்ப்படியட்டும்), என்னையே நம்பட்டும்; அதன் மூலம் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்.
குர்ஆன் 2:186
இந்த ரமலானில்:
• உங்கள் துஆவை அதிகப்படுத்துங்கள்.
• உங்கள் வருமானத்தைத் தூய்மைப்படுத்துங்கள்.
• உங்கள் கீழ்ப்படிதலை வலுப்படுத்துங்கள்.
ஏற்கனவே உங்களோடு அருகில் இருக்கும் அல்லாஹ்விடம் நெருக்கமாகுங்கள்.
ரமலானில் செய்யப்படும் துஆ என்பது அல்லாஹ்விடம் வைக்கும் கோரிக்கை மட்டுமல்ல. அது நமக்கும் அல்லாஹ்விற்கும் இடையிலான ஒரு உறவு என்பதை மறக்க வேண்டாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
நோன்பு வசனங்களுக்கு இடையில் துஆ வசனம் வருவது ஏன்?
அல்லாஹ்வின் நெருக்கத்தையும், ரமலான் நோன்பு சமயத்தில் துஆ உருவாக்கும் ஆன்மீகத் தொடர்பையும் நோன்பு வசனங்களுக்கு இடையில் வரும் துஆ வசனம் வலியுறுத்துகிறது.
ஒவ்வொரு துஆவிற்கும் அல்லாஹ் பதிலளிக்கிறானா?
ஆம். அல்லாஹ் வெவ்வேறு வழிகளில் பதிலளிக்கிறான் — உடனடியாக அல்லது சற்று தாமதித்து, அல்லது ஒரு தீங்கைத் தடுப்பதன் மூலம். (முஸ்னத் அஹ்மத் # 11133)
ஹராமான வருமானம் துஆ அங்கீகரிக்கப்படுவதைத் தடுக்குமா?
ஆம். ஹராமான வருமானம் துஆ அங்கீகரிக்கப்படுவதைத் தடுக்கும் என்று நபி ﷺ அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் # 1015)
2:186-ல் அல்லாஹ் ஏன் “கூறுவீராக” என்று சொல்லவில்லை?
அல்லாஹ் நம்மோடு மிகவும் நெருக்கமாக இருப்பதை உணர்த்தவே “கூறுவீராக” என்ற சொல்லை பயன்படுத்தவில்லை.
