மறுபிறவி உண்மையா? புனர்ஜென்மம் உண்டா?

மறுபிறவி உண்மையா? புனர்ஜென்மம் உண்டா? ஜோதிடரால் முன்ஜென்மம் பற்றி சொல்ல முடியுமா? முன்பிறவி ஞாபகம் சிலருக்கு உள்ளதா? இந்த கேள்விகளுக்கான பதில்களை தெரிந்துக் கொள்ள இந்தக் கட்டுரையை படியுங்கள்.

முன்னுரை

மறுபிறவி உண்மையா? புனர்ஜென்மம் உண்டா? மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும்?

இந்த கேள்விகளுக்கான சரியான பதிலை தெரிந்து கொள்ள பலருக்கு ஆர்வம் உள்ளது. புனர்ஜென்மம், மறுபிறவி தத்துவம் பற்றி நடுநிலையாக, பகுத்தறிவோடு ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.

மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை சாத்தியமா? இது பற்றி அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

மறுபிறவி, புனர்ஜென்மம் என்பது என்ன?

இந்து மதம், பௌத்தம், சமணம், சீக்கியம் போன்ற மதங்களில், மறுபிறவி, புனர்ஜென்மம் பற்றிய நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கை என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

  • நாம் மரணிக்கும் போது, நம் உடல் அழியும், ஆனால் ஆன்மா அழியாமல் அடுத்த பிறவிக்கு பயணிக்கும்.
  • நாம் இவ்வுலகில் செய்யும் செயல்கள், அடுத்த பிறவியை தீர்மானிக்கும். நற்செயல் செய்பவர்கள் உயர்ந்த பிறவியைப் பெறுவார்கள். தீய செயல்கள் செய்பவர்கள் தாழ்ந்த பிறவியைப் பெறுவார்கள்.
  • வறுமை, நோய், ஊனம் போன்ற துன்பங்களை ஒருவர் அனுபவிப்பது, அவர் முன்ஜென்மத்தில் செய்த செயல்கள் தான் காரணம்.
  • பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு என இந்த சுழற்சி, ஒருவர் மோட்சம் அடையும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

நீதிக்காக ஏங்கும் இதயம்

இந்த உலகில் கெட்டவர்கள் கொடி கட்டி வாழ்வதும், நல்லவர்கள் கஷ்டப்படுவதையும் நாம் பார்க்கிறோம். நீதி கிடைக்காதா என்று ஏங்குபவர்கள் பலர். நீதி இருக்கிறது என்பதற்கு மறுபிறவி, புனர்ஜென்மம் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

முன்பிறவியில் செய்த செயல்களால் தான் சிலர் நன்றாக இருக்கிறார்கள், பலர் கஷ்டப்படுகிறார்கள். இப்பிறவியில் தீய செயல்கள் செய்பவர்கள் அடுத்த பிறவியில் கஷ்டப்படுவார்கள் என்பதால், நீதி உள்ளது என்று சொல்லுகிறார்கள். மேலோட்டமாகப் பார்க்கும் போது விளக்கம் நன்றாக தெரிந்தாலும், உண்மையில் நீதி கிடைக்கிறதா? வாருங்கள் பார்க்கலாம்.

உங்களை போலீஸ் அரெஸ்ட் செய்ய வந்தால்…

நீங்கள் நள்ளிரவில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொது, உங்கள் வீட்டு கதவு வேகமாக தட்டப்படுகிறது. நீங்கள் கதவைத் திறக்கும்போது போலீசார் கதவின் முன் நிற்கின்றனர். உங்களைக் கைது செய்யப் போவதாக போலீசார் சொல்கிறார்கள். அப்படியா, நல்லது என்று அவர்களுடன் கிளம்பி போய்விடுவீர்களா? நிச்சயமாக இல்லை. “என்னை ஏன் கைது செய்கிறீர்கள்?” என்று கேட்பீர்கள் அல்லவா?

கைது ஏன் என்பதற்கு “நீ குற்றம் செய்துள்ளாய்” என்று மட்டும் சொல்லிவிட்டு, பிறகு எந்த விபரமும் சொல்லாமல் எங்களுடன் வர வேண்டும் என்று போலீசார் நிர்பந்தித்தால், இதை நீதி என்று யாரும் சொல்ல மாட்டோம். என்ன குற்றம் செய்தார் என்று சொல்லாமல், அதெப்படி கைது செய்யலாம் என்று கேட்போமல்லவா? 

இப்பிறவியில் கஷ்டம் எதனால்?

இப்பிறவியில் கஷ்டப்படும் நபர்களுக்கு அவர்கள் முன்ஜென்மத்தில் என்ன பாவம் செய்தார்கள் என்று தெரியுமா? உலகமுழுவதும் ஊனமுற்றவர்கள் இருக்கிறார்கள்.  “அவர்கள் முன்ஜென்மத்தில் பாவம் செய்துள்ளார்கள், அதனால் தான் அவர்களுக்கு ஊனம்” என்று எளிதாக சொல்லிவிடும் நாம், அவர்களிடம் நீங்கள் முன்ஜென்மத்தில் என்ன பாவம் செய்தீர்கள் என்று தெரியுமா என்று கேட்பதில்லை. அப்படி கேட்டுப் பார்த்தால், என்ன பாவம் செய்தோம் என்று தெரியாது என்றே சொல்வார்கள்.

எந்த குற்றம் செய்தார் என்று சொல்லாமல் கைது செய்யும் போலீஸுக்கும், என்ன பாவம் செய்தார்கள் என்று சொல்லாமால் மக்களை தண்டிப்பதற்கும் என்ன வித்தியாசம்?

ஏன் தண்டிக்கப்படுகிறோம் என்பதை ஒருவர் நிச்சயமாக அறிந்திருக்க வேண்டும். அதனால் தான், சட்டத்தில் கூட மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனைகள் நிறைவேற்றப்படுவதற்கு அனுமதியில்லை.

பிறரை விடுங்கள். உங்களை எடுத்துக் கொள்வோம்.

  • இந்த பிறவி உங்களுடைய எத்தனையாவது பிறவி என்று உங்களுக்கு தெரியுமா? முதலாவதா அல்லது இரண்டாவதா அல்லது மூன்றாவதா அல்லது எட்டாவதா?
  • முன் பிறவியில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

மேலே உள்ள இரண்டு கேள்விகளுக்கும் தெளிவான பதில் இல்லை என்றால், உண்மையான காரணம் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் தண்டிக்கப்படுகிறீர்கள் அல்லது நன்மை அடைகிறீர்கள். இதை எப்படி நீதி என்று சொல்ல முடியும்?

ஜோதிடர் முன்பிறவியை பற்றி சொல்வாரா?

“என் முன்பிறவியை பற்றி ஜோதிடரிடம் கேட்டு தெரிந்து கொள்வேன்” என்று சிலர் சொல்லலாம். ஜோதிடர் சொல்வது உண்மை தான் என்று எப்படி நம்புவது?

ஒரு பேச்சுக்காக, ஜோதிடர்கள் உண்மை சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், இந்த உலகில் 700 கோடி மக்கள் பல் வேறு நாடுகளில் வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஜோதிடர்களிடம் சென்று தங்கள் முன்பிறவியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்வது நடைமுறைக்கு சாத்தியமா? இப்படி நேரடியாக ஒரு காரணமும் சொல்லாமல் தண்டிப்பது எப்படி நீதியாகும்?

நீதித்துறை கூட ஒருவரின் தண்டனைக்கான காரணத்தை தெரிவிக்காமல் அவரை தண்டிப்பதில்லை. மிகவும் நீதியும், ஞானமுள்ள கடவுள், மனிதர்களை காரணம் சொல்லாமல் தண்டிக்கிறார் என்று சொல்வது சரியா?

நீதி தான் என்பது தெரிய வேண்டும்

நீதி செலுத்துவது மட்டும் போதாது. நீதி செலுத்தப்பட்டது என்று எல்லோரும் அறிய வேண்டும்.

லார்ட் ஹெவர்ட், இங்கிலாந்தின் முன்னாள் தலைமை நீதிபதி

நீதிமன்றத்தில் தீர்ப்பு சொல்லும் போது, குற்றம் என்ன, தண்டனை என்ன என்பதை மிகத் தெளிவாக எடுத்துச் சொன்ன பிறகே, நீதிபதி தீர்ப்பு வழங்குவார். உதாரணமாக: பாலியல் பலாத்கார வழக்கில் நீதிபதி தீர்ப்பு சொல்லும் போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் முன்னாலும், அவளுடைய உறவினரின் முன்னாலும் தான் தீர்ப்பை வாசிப்பார். இப்படி செய்வதால், குற்றத்தால் பாதிக்கப்பட்டவருக்கு நீதி செலுத்தப்பட்டது என்ற நம்பிக்கை பிறக்கும். அதனால், அவருக்கு மன நிம்மதி கிடைக்கும்.

நீதியின் இந்த அம்சம் மறுபிறவி கொள்கையில் முற்றிலும் இல்லை.

  • 60 இலட்சம் அப்பாவி மக்களைக் கொன்ற ஹிட்லர் தண்டிக்கப்பட்டானா? ஆம் என்றால், அவர் எத்தனை பிறவிகளை எடுத்துள்ளான்? (60 இலட்சம் பிறவிகளை எடுத்து அவன் கஷ்டப்படவேண்டும்).
  • ஹிட்லரால் கொல்லப்பட்ட 60 இலட்சம் அப்பாவி மக்களுக்கு நீதி கிடைத்ததா? அவர்களின் நிலை என்ன?

ஹிட்லரைப் போல் பல இலட்சக்கணக்கான மனித மிருகங்களை இந்த உலகம் கண்டுள்ளது. அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் கோடிக்கணக்கான மக்கள். இவர்களின் நிலை என்ன? நீதி கிடைத்ததா என்று தெரியவில்லை. நீதி கிடைக்குமா என்றும் தெரியவில்லை.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மறுபிறவி கொள்கையில் பதில்கள் இல்லை.

நீதி செலுத்துவதில் இவ்வளவு பெரிய குறை இருப்பது உங்களுக்கு சரியாக தெரிகிறதா?

முழுமையான நீதி கிடைக்க உலகம் முடிவுக்கு வர வேண்டும்

மனிதர்களுக்கு முழுமையான நீதி கிடைக்கவேண்டுமென்றால் நாம் வாழும் இந்த உலகம் முடிவுக்கு வர வேண்டும். ஏன் என்று நீங்கள் கேட்கலாம். ஒரு உதாரணம் மூலம் இதைப் புரிந்து கொள்வோம்.

ஒருவர் ஒரு மரத்தை நடுகிறார். அதை நட்ட சில மாதங்களில் அவர் இறந்துவிடுகிறார். அவர் நட்ட மரம் 100 ஆண்டுகள் வாழ்ந்து, பழங்களையும் நிழலையும் தந்து மக்களுக்கு பயனளிக்கிறது. ஒருவர் நட்ட மரத்தால், 100 ஆண்டுகளுக்கு மக்கள் பயனடைகிறார்கள். அதனால், அந்த  மரத்தை நட்ட நபருக்கு அதற்கான நன்மை கிடைக்க வேண்டும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள்.

அந்த மரம் வாழும் 100 ஆண்டுகளுக்கு முன்பே அந்த நபர் மீண்டும் மறுபிறவி எடுத்து விட்டால், அந்த மரத்தை நட்டதற்காக அவருக்கு முழு நன்மை கிடைக்காமல் போய் விடும். ஏனெனில், அவர் நட்ட மரத்தின் பயன்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எனவே, அந்த மரத்தை நட்டதற்கான முழு நன்மையைப் பெற, அந்த நபர் 100 ஆண்டுகள், அதாவது மரம் இறக்கும் வரை மறுபிறவி எடுக்க முடியாது.

நாம் செய்யும் பல நற்செயல்களுக்கு இது பொருந்தும். ஒருவர் அனாதை இல்லத்தைத் தொடங்கினால், அந்த அனாதை இல்லம் செயல்படும் வரை, அந்த நபருக்கு முழு நன்மை கிடைக்காது.

இது ஒரு தீய செயலுக்கும் பொருந்தும். உதாரணமாக: ஹிரோஷிமா, நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டின்  பின்விளைவுகள் இன்றும் காணப்படுகின்றன என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பின்விளைவுகள் உலகில் இருக்கும் வரை, குண்டு வீசப்பட்டதற்குப் பின்னால் இருந்தவர்களை ஒருபோதும் முழுமையாக தண்டிக்க முடியாது.

இப்படி பல நற்செயல்களின் பயன்களும், தீய செயல்களின் விளைவுகளும் உலகம் அழியும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். எனவே, முழுமையான நன்மையோ, தண்டனையோ கொடுக்க இந்த உலகம் முடிவுக்கு வர வேண்டும்.

முன்பிறவியின் நினைவுகள் இருக்கிறதா?

சிலர் தங்களுடைய முன்பிறவியின் நினைவுகள் இருப்பதாக சொல்கின்றனர். இதனால், மறுபிறவி என்று ஒன்று இருக்கிறது என்று சிலர் வாதிடுகின்றனர். இது உண்மையா என்று கண்டறிய பல்வேறு மனநல மருத்துவர்கள் இதை ஆய்வு செய்துள்ளனர்.

இப்படி ஒரு ஆய்வை செய்தவர் தான் நிக்கோலஸ் ஸ்பானோஸ். இவர் கனடாவின் கார்ல்டன் பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராகவும்,  ஹிப்னாஸிஸ் ஆய்வகத்தின் இயக்குநராகவும் இருக்கிறார்.

சிலருடைய வாழ்க்கை அனுபவங்கள், தனிப்பட்ட ஆசைகள், எதிர்பார்ப்புகள், தொலைக்காட்சி, நாவல்கள், மற்றும் அவர்கள் சமூக சூழலின் தாக்கம் இந்த நினைவுகள் உருவாக காரணம் என்று அவர் கண்டறிந்தார்.

இந்த ஆய்வின் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள: “Multiple Identities & False Memories: A Sociocognitive Perspective” என்ற அமெரிக்கன் உளவியல் சங்கம் (American Psychological Association) வெளியிட்ட நூலில் காணலாம்.

ஸ்பானோஸ் எழுதிய Multiple Identities & False Memories: A Sociocognitive Perspective

ஒரு பேச்சிற்காக, சிலருக்கு முன்பிறவியின் நினைவுகள் இருக்கிறது என்று ஏற்றுக் கொண்டாலும், முன்பிறவியின் நினைவுகள் உலகில் ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கிறது. அது உண்மையா, பொய்யா என்பது கூட நம்மால் கண்டறிய முடியாது. அது மட்டுமல்லாமல், நீதி செலுத்தப்படுவதில் மேலே நாம் சுட்டிக் காட்டிய பிரச்சினைகளுக்கு, ஒரு சிலருக்கு முன்பிறவியின் நினைவுகள் இருப்பதால் மட்டுமே தீர்வு கிடைக்காது.

முடிவுரை

மறுபிறவி, புனர்ஜென்மம் என்ற இந்த கொள்கையில், நீதியின் அடிப்படை அம்சங்கள் இல்லை. அதனால், இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. மறுபிறவி, புனர்ஜென்மம் பற்றி பேசும் பலர், ஒருவர் முன்பிறவியில் செய்த செயல்களின் விளைவாகத் தான் தாழ்ந்த சாதியில் பிறக்கிறார் என்றும், அதேபோல் முன்பிறவியில் செய்த செயல்களின் காரணமாக ஒருவர் பிராமணராகவோ அல்லது உயர் சாதியில் பிறக்கிறார் என்றும் சொல்வதைக் காணலாம். நீதியின் அம்சம் இருக்கிறதோ, இல்லையோ சாதி அமைப்பு (வர்ண அமைப்பு) ஏற்படுத்தும் பாகுபாடுகளை நியாயப்படுத்துவதற்காக இந்த மறுபிறவி, புனர்ஜென்மம் கொள்கை பயன்படுத்தப்படுகிறது என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.

ஊனமுற்ற அல்லது பார்வையற்ற குழந்தைகள் பிறப்பது எதனால்?

அநியாயமாக கொல்லப்படும் மனிதர்களுக்கு நீதி எப்படி கிடைக்கும்?

ஹிட்லருக்கு எப்படி தண்டனை கிடைக்கும்?

இந்த கேள்விகளுக்கான பதில்களை தெரிந்துக் கொள்ள இந்தக் கட்டுரையை படியுங்கள்.

மேலும் படிக்க

WHAT OTHERS ARE READING

Most Popular