பெருமை மட்டுமே ஷைத்தானின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று பலர் நினைக்கிறார்கள். பெருமை ஒரு முக்கியமான காரணமாக இருந்தாலும், அந்த பெருமை வேறு ஒரு கொடிய பழக்கத்திலிருந்து தான் துவங்கியது. அது என்ன?
ஷைத்தான் தன்னை ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க தொடங்கிய உடனே, அவனது உள்ளத்தில் பெருமையும், பொறாமையும் தோன்றின. இந்த ஒப்பீடுதான் இறுதியில் அவனை அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யத் தூண்டியது.
ஷைத்தானிடம் இருந்த அந்த தீய குணம் இன்று நம்மில் பலரிடமும் இருக்கிறது.
ஷைத்தானின் பெருமை ஒப்பீட்டில்தான் தொடங்கியது
ஆதமுக்குச் ஸஜ்தா செய்ய மறுத்தபோது, ஷைத்தான் கூறியதை அல்லாஹ் நமக்குக் கூறுகிறான்:
நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நீ நெருப்பால் படைத்தாய்! அவரைக் களிமண்ணால் படைத்தாய்!” என்று கூறினான்.
குர்ஆன் 7:12
“நான் அவரை விடச் சிறந்தவன்” என்று சொல்லும் போது, அவன் தன்னை ஆதம் (அலை) அவர்களோடு ஒப்பிட்டு பார்க்கிறான்.
இந்த ஒப்பீடு தான் அவனுள் பல தீய குணங்களுக்கு வழிவகுத்தது. உதாரணமாக:
- பொறாமை
- பெருமை
ஒப்பீட்டில் தொடங்கிய அந்த செயல், அல்லாஹ்வின் கட்டளையை நிராகரிக்க வைத்து, அவனது வீழ்ச்சிக்கும் காரணமானது.
முதல் கொலைக்குக் காரணமான ஒப்பீடு
மனித வரலாற்றின் முதல் கொலைக்கு ஒப்பீடு எவ்வாறு காரணமாக அமைந்தது என்பதை ஆதம் (அலை) அவர்களின் இரு மகன்களின் கதையின் மூலம் அல்லாஹ் நமக்கு உணர்த்துகிறான்.
அல்லாஹ் கூறுகிறான்:
ஆதமுடைய இரு மகன்களின் உண்மையான செய்தியை அவர்களுக்கு முன் ஓதிக் காட்டுவீராக. இருவரும் ஒரு குர்பானி (பலி)யைக் கொடுத்தபோது, அவ்விருவரில் ஒருவரிடமிருந்து (குர்பானி) ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து ஏற்கப்படவில்லை. (ஏற்கப்படாதவர்) “நிச்சயம் நான் உன்னைக் கொல்வேன்’’ என்றார்.
குர்ஆன் 5:27
இரு சகோதரர்களும் குர்பானி செய்தார்கள். ஆனால் ஒருவருடையது மட்டுமே ஏற்கப்பட்டது. தன்னைத் திருத்திக் கொள்வதற்குப் பதிலாக, குர்பானி ஏற்கப்படாத சகோதரன் ஒப்பிட்டு பார்த்து, பொறாமை கொண்டான். அந்தப் பொறாமை இறுதியில் மனித வரலாற்றின் முதல் கொலைக்கு வழிவகுத்தது.
ஒப்பீடாகத் தொடங்கிய செயல், பொறாமையாகவும், வெறுப்பாகவும் மாறி கொலை செய்யும் அளவிற்கு போனது.
ஒப்பீட்டின் காரணமாக மக்கள் நபி ﷺ நிராகரித்தனர்
குறைஷிகள் நபிகள் நாயகம் ﷺ அவர்களை நிராகரித்ததற்கு அல்லாஹ் ஒரு காரணத்தை நமக்கு நினைவுபடுத்துகிறான்.
நபி ﷺ உண்மையைப் பரிசோதிப்பதற்கு பதிலாக, குறைஷிகள் நபிகள் நாயகத்தை ﷺ செல்வந்தர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்:
“இந்த குர்ஆன் (மக்கா இன்னும் தாயிஃப் ஆகிய) இந்த இரண்டு ஊர்களில் உள்ள (வசதி படைத்த) ஒரு பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்க வேண்டாமா!” என்று அவர்கள் கூறுகிறார்கள்.
குர்ஆன் 43:31
அதிகாரமிக்க வசதி படைத்தவர்களுக்கே வஹீ (இறைச்செய்தி) வந்திருக்க வேண்டும் என்று அவர்கள் நம்பினார்கள். அவர்களின் இந்த ஒப்பீடு, உண்மையை ஏற்றுக் கொள்வதிலிருந்து அவர்களைத் தடுத்தது.
எப்போது ஒப்பிட்டு பார்க்கலாம் தெரியுமா?
இஸ்லாம் ஒப்பிட்டு பார்ப்பதை முற்றிலும் தடை செய்யவில்லை. மாறாக, நற்செயல்களில் ஒப்பிட்டு பாருங்கள் என்று சொல்கிறது.
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ள அனுமதியில்லை.
புகாரி # 73
1. அல்லாஹ் ஒருவருக்கு செல்வத்தைக் கொடுத்து, அதை அவர் நல்வழியில் செலவிடுதல்.
2. அல்லாஹ் ஒருவருக்கு கல்வியை கொடுத்து, அதன் மூலம் அவர் நற்செயல்கள் செய்து அதைப் பிறருக்குக் கற்பித்துக் கொடுத்தல்.
நீங்கள் பிறரோடு உங்களை ஒப்பிட்டு பார்க்க விரும்பினால்:
- உங்களை விட மார்க்க அறிவு அதிகம் உள்ளவர்களோடு உங்கள் அறிவை ஒப்பிடுங்கள்
- உங்களை விட அதிகம் தர்மம் செய்பவர்களோடு உங்கள் தர்மத்தை ஒப்பிடுங்கள்
- உங்களை விட அதிகம் வணக்க வழிபாடுகள் செய்பவர்களோடு உங்கள் வணக்க வழிபாட்டை ஒப்பிடுங்கள்
இவையெல்லாம் ஆரோக்யமான ஒப்பீடுகள். உங்களை நற்செயல்களின் பக்கம் இழுத்து
செல்லும்.
முடிவுரை
ஷைத்தான் அழிந்த சம்பவம் நமக்கு ஒரு முக்கியமான படிப்பினையை தருகிறது. ஒப்பீடு நம் உள்ளத்தில் தீய குணங்களை ஏற்படுத்தும். அது ஷைத்தானை அழித்தது, முதல் கொலைக்கு வழிவகுத்தது, குறைஷிகள் சத்தியத்தை நிராகரிக்கக் காரணமானது.
“எனது ஒப்பீடுகள் எனது பெருமையை வளர்க்கின்றனவா அல்லது எனது ஈமானை பலப்படுத்துகின்றனவா?” என்று உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
ஷைத்தானின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?
ஷைத்தான் தன்னை ஆதம் (அலை) அவர்களுடன் ஒப்பிட்டு, தன்னை மேலானவன் என்று அகந்தையுடன் அறிவித்ததே அவனது வீழ்ச்சிக்குத் தொடக்கமாக அமைந்தது (திருக்குர்ஆன் 7:12).
ஆதமின் மகன்களின் கதை உணர்த்தும் பாடம் என்ன?
ஒப்பீடும், பொறாமையும் மனித வரலாற்றின் முதல் கொலை போன்ற அழிவுச் செயல்களுக்கு எவ்வாறு வழிவகுத்தது என்பதை அவர்களின் கதை காட்டுகிறது. (திருக்குர்ஆன் 5:27).
குறைஷிகள் ஏன் நபிகள் நாயகத்தை ﷺ நிராகரித்தனர்?
அவர்களில் பலர் நபியைச் செல்வந்தர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர்; வஹீ என்பது ஒரு செல்வந்தருக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று நம்பினர் (திருக்குர்ஆன் 43:31).
இஸ்லாத்தில் ஒப்பீடு செய்யவே கூடாதா?
உலக விஷயங்களுக்கு ஒப்பீடு செய்வதை இஸ்லாம் விரும்பவில்லை. ஆனால் கல்வி, தர்மம், வழிபாடு போன்ற நற்செயல்களில் ஒப்பீடு செய்து, போட்டி போடுவதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது.
