அல்லாஹு அக்பர்…அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர்…அல்லாஹு அக்பர்
ஒரு நாளைக்கு ஐந்து முறை, உங்களுக்கு அருகிலுள்ள பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டிருப்பீர்கள். சமீப காலமாக, அதான் என்ற தொழுகைக்கான அழைப்பு தொடர்பாக சமீப காலமாக பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதான் என்றால் என்ன? அதான் குறித்த இந்த சர்ச்சைகள் தேவைதானா? வாருங்கள் இது குறித்து சிந்திக்கலாம்.
அதான் எதற்காக?
இஸ்லாமியர்கள், ஒரு நாளில், குறிப்பிட்ட நேரங்களில், பள்ளிவாசலில் கூடி ஐந்து முறை தொழ வேண்டும்.
சூரியனின் இயக்கத்தை வைத்து இந்த தொழுகை நேரம் தீர்மானிக்கப்படுகிறது. சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன நேரங்கள் ஆண்டு முழுவதும் மாறிக்கொண்டே இருக்கும். எனவே, சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கு முன் தொழுகைக்கான நேரங்களும் மாறுபடும்.
ஆண்டு முழுவதும் தொழுகை நேரங்கள் மாறுவதால், தொழுகைக்கான நேரத்தை முஸ்லிம்களுக்கு நினைவூட்ட வேண்டிய அவசியம் உள்ளது. இந்த நினைவூட்டலை தான் அதான் செய்கிறது. முஸ்லீம்கள் அதானை (தொழுகைக்கான அழைப்பை) கேட்டவுடன், பள்ளிவாசலிற்கு சென்று அனைவரும் ஒன்றாக சேர்ந்து தொழுகை நடத்துவார்கள்.
அதான் எப்படி தொடங்கியது?
முஹம்மது நபியின் காலத்தில், “தொழுகைக்கான அழைப்பு”க்கு பல யோசனைகள் கொடுக்கப்பட்டன. சிலர் மணி அடிக்க வேண்டும் என்றும், சிலர் சங்கு ஊதலாம் என்றும், சிலர் தீ மூட்டி மக்களை அழைக்கலாம் என்றும் ஆலோசனைகள் தந்தனர். இறைவனின் வழிகாட்டுதல் மூலமாக, முஹம்மது நபி, “மனித குரலை” “தொழுகைக்கான அழைப்பிற்கு” பயன்படுத்தத் தேர்ந்தெடுத்தார்.
முஹம்மது நபி அவர்கள் மனிதக் குரலை விட, அதிக சத்தமாக ஒலிக்கும் மணியையோ, சங்கையோ அல்லது தூரத்தில் இருந்தே கண்ணிற்கு தெரியும் நெருப்பையோ தேர்ந்தெடுக்கவில்லை என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். முஹம்மது நபி ஏன் அப்படிச் செய்தார் என்று நீங்கள் கேட்கலாம். மனிதக் குரலில் கொடுக்கப்படும் “தொழுகைக்கான அழைப்பு”, அதைச் சொல்பவருக்கும், அதைக் கேட்பவருக்கும் ஒரு மிகப் பெரிய ஆன்மீக அனுபவம்.
அதானில் சொல்லப்படும் வாசகங்களின் பொருள் என்ன?
அல்லாஹு அக்பர் = இறைவன் மிகப் பெரியவன்
அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ் = வணக்கத்திற்கும் கீழ்ப்படிதலுக்கும் தகுதியானவன் இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்
அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூல் அல்லாஹ் = முஹம்மது இறைவனின் இறுதி தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்
ஹய்யா அல்-ஸலாஹ் = தொழுகைக்கு வாருங்கள்
ஹய்யா அல் ஃபலாஹ் = வெற்றிக்கு வாருங்கள்
குறிப்பு: “அல்லாஹ்” முஸ்லிம்களின் தனிப்பட்ட கடவுள் அல்ல. அல்லாஹ் என்ற அரபு வார்த்தையின் பொருள் “கடவுள்”. அரபு மொழி பேசும் கிறிஸ்தவர்களும், யூதர்களும் கடவுளைக் குறிக்க “அல்லாஹ்” என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறார்கள். “கடவுள்” என்ற தமிழ் வார்த்தையை அரபு மொழியில் மொழிபெயர்க்க, Google மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தினால், அது “அல்லாஹ்” என்று தான் மொழிபெயர்க்கும்.

அதான் ஒரு ஆன்மீக அனுபவம்
அதானில் உள்ள வாசகங்களின் மொழிபெயர்ப்பை ஒருவர் படித்தால், அதில் சர்ச்சைக்குரிய அல்லது ஆட்சேபனைக்குரிய எதுவும் இல்லை என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள். வாசகங்களுக்குப் பின்னால் உள்ள ஆன்மீக அர்த்தங்களை இப்போது பார்ப்போம்.
அல்லாஹு அக்பர் – இறைவன் மிகப் பெரியவன்
இறைவனை நம்பும் ஒவ்வொருவரும் அவன் தான் மிகப் பெரியவன் என்பதை ஒப்புக்கொள்வார்கள்.
அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்திற்கும் கீழ்ப்படிதலுக்கும் தகுதியானவன் இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்.
இறைவன் எல்லவற்றையும் விட மிகப் பெரியவன் என்பதால், அவனை மட்டுமே வணங்க வேண்டும், அவனுக்கு மட்டுமே கீழ்ப்படிய வேண்டும் என்பது தர்க்கரீதியானது மட்டுமல்ல, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் விஷயம் தான்.
அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூல் அல்லாஹ் = முஹம்மது இறைவனின் இறுதித்தூதர் என்று சாட்சி கூறுகிறேன்
முஹம்மது நபி அவர்கள் நம்மை எல்லாம் படைத்த அந்த ஓர்இறைவனை மட்டும் வணங்கவும், கீழ்படியாவும் நமக்கு கற்று தந்த இறைவனின் இறுதித்தூதராவார். எனவே, தொழுகைக்கான அழைப்பில் முஸ்லிம்கள் அவரை நினைவு கூறுகிறார்கள்.
ஹய்யா அல்-ஸலாஹ் – தொழுகைக்கு வாருங்கள்
மனிதர்கள், எவ்வளவு தான் இறைவனுக்கு கீழ்ப்படிந்து நல்லவர்களாக வாழ வேண்டும் என்று முயற்சி செய்தாலும், உலக இன்பங்களில் மூழ்கி, அதனால் திசை திருப்பப்பட்டு, பாவங்களையும் ஒழுக்கக்கேடுகளையும் செய்து விடுகிறார்கள்.
மனிதர்கள் தங்களை பாவங்கள் மற்றும் ஒழுக்கக்கேடுகளிலிருந்து காத்துக்கொள்ள, இறைதொடர்ப்பு மிக அவசியம். ஒரு நாளில், ஐந்து முறை, தங்களை படைத்த இறைவனோடு தொழுகையின் மூலம் முஸ்லிம்கள் தொடர்பு கொள்வதனால், பாவங்களிலிருந்து தங்களை தூய்மைப்படுத்தி கொள்கிறார்கள்.
“உங்கள் வீட்டு வாசலில் இருக்கும் நதியில், நீங்கள் ஒரு நாளைக்கு ஐந்து முறை குளித்தால், உங்கள் மீது அழுக்கு இருக்குமா?” என்று முஹம்மது நபியவர்கள் கேட்டார்கள். அவரது தோழர்கள் “அழுக்கின் தடயம் கூட இருக்காது.” என்று கூறினார்கள். முஹம்மது நபியவர்கள் “இது போலவே, ஐந்து நேர தொழுகைகளின் மூலம், மனிதர்கள் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தப்படுகிறார்கள்.” என்று முஹம்மது நபி கூறினார்கள்.
சஹீஹ் புகாரி
ஹய்யா அல் ஃபலாஹ் – வெற்றிக்கு வாருங்கள்
இந்த வாழ்க்கை தற்காலிகமானது என்றும், மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை உண்டு என்றும், அந்த மரணத்திற்கு பின் உள்ள வாழ்க்கை முடிவில்லாதது என்றும் இஸ்லாம் போதிக்கிறது. நற்செயல்கள் செய்து இந்த உலகத்தில் நல்லவர்களாக வாழ்பவர்கள் மரணத்திற்குப் பின் உள்ள வாழ்வில் வெற்றியடைவார்கள். தீய செயல்களைச் செய்து, கெட்டவர்களாக வாழ்பவர்கள் மரணத்திற்குப் பின் உள்ள வாழ்வில் நஷ்டமடைவார்கள்.
ஒரு தினத்தில், நல்ல புரிதலோடு, ஐந்து வேளை தொழுகையின் மூலம் தன்னை படைத்த இறைவனோடு தொடர்புள்ள ஒரு நபர், பாவங்கள் மற்றும் ஒழுக்கக்கேடுகளிலிருந்து விலகி, நற்செயல்களை செய்யவே பாடுபடுவார். மரணத்திற்குப் பின் உள்ள வாழ்வில் வெற்றியடைய, தொழுகை ஒரு முக்கிய பங்கு வகிப்பதால், “வெற்றிக்கு வாருங்கள்” என்று அதானில் அழைக்கிறார்கள்.
அதானும், மாற்று மதத்தவர்களும்
பி பி சி நிருபர் அதானை கேட்டு விட்டு அழும் காட்சி
ஹாலிவூட் நட்சத்திரம் லியாம் நீல்சன் “அதான் கேட்பது எனக்கு ரொம்ப விருப்பம்” என்கிறார்
ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவூட் நட்சத்திரம் மோர்கன் பிரீமேன் “அதானின் ஒலி உலகிலேயே மிக அழகான ஒலி” என்கிறார்
அதான் – ஒவ்வொரு மனிதனும் நேர்மையாகவும் நல்லவனாகவும் இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது
உலகில் ஒழுக்கக்கேடுகள், அநாகரீகங்கள் மற்றும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்பதை நம்மில் பெரும்பாலோர் ஒப்புக்கொள்கிறோம். பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஒழுக்கமற்ற சுயநலம் நிறைந்த, ஒரு சமூகமாக நாம் மாறி வருகிறோம். வயதான பெற்றோர்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்டு முதியோர் இல்லங்களில் சேர்வது அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட காலச்சூழ்நிலையில், படைத்த இறைவனோடு மனிதனை தொடர்புபடுத்தி, நற்செயல்கள் செய்ய தூண்டும் “அதான்” காலத்தின் தேவை. எனவே, அது வரவேற்க பட வேண்டும்.
அதான் மற்றும் ஒலிப்பெருக்கிகள்
பல மதத்தை சேர்ந்தவர்களும், ஒற்றுமையோடு சகோதர, சகோதிரிகளாக வாழும் நம் நாட்டில், கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவது புதிய நிகழ்வு அல்ல. அனைத்து வழிபாட்டுத் தலங்களும் ஒலிபெருக்கிகளை எந்த பிரச்சனையும் இல்லாமல் பயன்படுத்தி வருவதை நம்மால் காண முடிகிறது.
இந்தியா ஒரு ஆன்மீக நாடு. வளமான ஆன்மீக பாரம்பரியம் கொண்ட நாடு. உலகில் ஆன்மீகத்தைப் போற்றும் நாடு ஒன்று உண்டு என்றால் அது இந்தியாதான். இந்தியர்களும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர்கள். ஆன்மிகத்தைப் போற்றுபவர்கள். அதான் போன்ற ஆன்மீகம் தொடர்பான அம்சங்களில் நமக்கு எப்படி பிரச்னை இருக்க முடியும்?
அதே சமயம், முஸ்லிம்கள் மற்றும் பிற மதங்களைச் சேர்ந்தவர்கள், இரவு நேரங்களில் அல்லது அதி காலையில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவது கைக்குழந்தைகள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் முதியவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே அவர்கள் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது நல்லது.
மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதை குறித்து இஸ்லாத்தின் வழிகாட்டுதல் மிக தெளிவு.
“யாருடைய நாவாலும் கைகளாலும் ஏற்படும் தீய்மையிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களோ அவர் தான் முஸ்லீம். யாருடைய தீங்குமில்லாமல், மக்களின் உயிரும் செல்வமும் பாதுகாப்பாக இருக்கிறதோ அவர்தான் இறை நம்பிக்கையாளர்.” என்று முஹம்மது நபி சொன்னார்கள்.
சஹீஹ் புகாரி
உண்மையான முஸ்லீம்கள், தங்களுடைய செயல்களால் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். எனவே, மாண்புமிகு நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்படி ஒலிபெருக்கிகளின் டெசிபல் அளவை முஸ்லிம்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். பிற மத சகோதரர்களும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தும்போது மாண்புமிகு நீதிமன்றங்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவார்கள் என்று நம்புகிறோம்.