More

    Choose Your Language

    வாழ்க்கையே வெறுப்பாக இருக்கிறதா?

    சிந்தனை மாற்றத்தின் மூலமாக ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்த நவீன மனநல மருத்துவர்கள் பயன்படுத்தும் கோக்னிடிவ் தெரபி என்ற சிகிச்சை முறையை குர்ஆன் பயன்படுத்துகிறது. 1400 வருடங்களுக்கு முன்னால் அருளப்பட்ட திருக்குர்ஆன் கோக்னிடிவ் தெரபியை கையாள்வது நம்மை பிரமிப்புக்லாக்குகிறது.

    வாழ்க்கையே வெறுப்பாக இருக்கிறதா? கண்டிப்பா இதை ட்ரை பண்ணுங்க!

    கஷ்டத்துக்கு மேல கஷ்டம், வாழ்க்கையே வெறுப்பாக உள்ளது! எனக்கு மட்டும் ஏன் இப்படி? இப்படியெல்லாம் உங்களுக்கு தோன்றுகிறதா? அப்ப இந்த ஆர்டிகிள் உங்களுக்கு தான்.

    வாழ்க்கையில் கஷ்டபடுபவர்களுக்கு ஆறுதல் சொல்லி, நம்பிக்கை ஊட்டி, மனதளவில ஒரு positive ஆன மாற்றத்தையும், தெம்பையும் தருகின்ற குர்ஆனில் உள்ள 93 வது அத்தியாயத்தை தான் நாம் பார்க்கவிருக்கிறோம்.

    முஹம்மது நபி அவர்களின் வாழ்க்கையிலே ஒரு சோகமான காலகட்டத்தில் அருளப்பட்டது தான் இந்த அத்தியாயம்.

    வாழ்க்கையில் நல்லது கெட்டது மாறி மாறி வரும்

    முற்பகல் மீது சத்தியமாக, மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக!

    குர்ஆன் அத்தியாயம் 93 வசனங்கள் 1-2

    முற்பகல் மீதும், மூடிக் கொள்ளும் இரவின் மீதும் சத்தியம் செய்து இந்த அத்தியாயம் துவங்குகிறது.

    எப்படி இரவு பகல் மாறி மாறி வருகிறதோ, அதே போல் தான் வாழ்க்கையிலும் நல்லது கெட்டது மாறி மாறி வரும். பல வருஷம் கஷ்டப்படாமல் நன்றாக வாழ்ந்தவர்களும் இல்லை, பல வருஷம் நல்லதே நடக்காமல் கஷ்டப்பட்டவர்களும் கிடையாது. இதை தான் இந்த வசனங்கள் உணர்த்துகிறது.

    இரவுக்கு பின் பகல், அதே போல்….

    எப்படி இருளுக்கு பின்னால் பகல் என்ற வெளிச்சம் இருக்கிறதோ, அதே போல் நாம் படும் கஷ்டத்திற்கு பின்னாலும், ஒரு நல்லது நடக்கும் என்கின்ற ஒரு மிகப் பெரிய வாழ்க்கை உண்மைகளை இந்த அத்தியாயத்தின் ஆரம்ப இரண்டு வசனங்களும் நமக்கு நினைவூட்டுகிறது.

    கடவுள் உங்களை கைவிட இல்லை

    உமது இறைவன் உம்மைக் கைவிடவும் இல்லை; வெறுக்கவும் இல்லை.

    குர்ஆன் அத்தியாயம் 93 வசனம் 3

    நீங்கள் மிகவும் கஷ்டப்படும் போது, கடவுள் என்னை கை விட்டு விட்டாரோ என்று உங்களுக்கு தோன்றலாம். கடவுள் உங்களை கைவிடவும் இல்லை; வெறுக்கவும் இல்லை என்று இந்த வசனம் உங்களுக்கு ஆறுதல் சொல்கிறது.

    கஷ்டங்கள் தற்காலிகமானவை

    இந்த வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் எல்லா கஷ்டங்களும் தற்காலிகமானது தான் என்று அடுத்த இரண்டு வசனங்கள் சொல்கிறது.

    பின்னால் வருவது, முன்னால் இருப்பதை விட உமக்கு மிகவும் சிறந்ததாயிருக்கும். விரைவில் உம் இறைவன் நீர் திருப்தியடையும் அளவுக்கு உமக்கு வழங்குவான்.

    குர்ஆன் அத்தியாயம் 93 வசனங்கள் 4-5

    உங்கள் வாழ்க்கையை பற்றி சற்று சிந்தனை செய்து பாருங்கள். எத்தனை கஷ்டங்களை நீங்கள் கடந்து வந்துள்ளீர்கள்! எத்தனை கஷ்டங்களை நீங்கள் வென்று வந்துள்ளீர்கள்! அதே போல் தான் இந்த கஷ்டத்தையும் நீங்கள் வென்று ஒரு சிறந்த எதிர்காலத்தை நீங்கள் அடைவீர்கள் என்ற ஒரு மிகப் பெரிய நம்பிக்கையை இந்த வசனங்கள் தருகிறது.

    கடவுள் செய்த உதவிகள்

    உம்மை அனாதையாகக் கண்டு, அவன் அரவணைக்கவில்லையா? உம்மை வழி அறியாதவராகக் கண்டு, நேர்வழி காட்டினான். உம்மை ஏழையாய்க் கண்டு, தன்னிறைவு பெற்றவராக்கினான்.

    குர்ஆன் அத்தியாயம் 93 வசனங்கள் 6-8

    நீங்கள் சிறு குழந்தையாக இருந்ததிலிருந்து பல வகையில் உங்களுக்கு கடவுள் உதவி செய்துள்ளார். கடவுளோட உதவியும், அருளும் இல்லாமல் நீங்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கவே முடியாது. இப்படி பல வகையில் உங்களுக்கு உதவி செய்த கடவுள், இப்போது மட்டும் உங்களுக்கு உதவ மாட்டார் என்று ஏன் நினைக்கறீர்கள் என்று நம்மை நோக்கி கேட்பது போல் அடுத்த மூன்று வசனங்களும் அமைந்துள்ளன. கடவுளின் கருணையில் ஒரு போதும் நம்பிக்கை இழக்காதீர்கள்!

    கஷ்டப்படும் கோடிக்கணக்கான மக்கள்

    நீர் அநாதைகளுடன் கடுமையாய் நடந்து கொள்ளாதீர். யாசகம் கேட்பவரை விரட்டாதீர். உமது இறைவனின் அருட்கொடைப் பற்றி எடுத்துரைப்பீர்!

    குர்ஆன் அத்தியாயம் 93 வசனங்கள் 9-11

    உங்களை விட மோசமாக கஷ்டப்படும் கோடிக்கணக்கான மக்கள் உலகத்தில் இருக்கிறார்கள். எத்தனையோ நபர்களுக்கு வீடு கூட இல்லை. சாப்பிட சாப்பாடு கூட இல்லை. கை விரலை கூட உயர்த்த முடியாமல் நோயில் கஷ்டப்படுபவர்கள் எத்தனையோ நபர்கள் உள்ளனர்.

    இவர்கள் படும் கஷ்டத்தோடு, உங்கள் கஷ்டத்தை ஒப்பிட்டு பாருங்கள். நீங்கள் படும் கஷ்டம் எல்லாம் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு புரியும். அதனால் கடவுளுக்கு நன்றி செலுத்தி கஷ்டப்படுபவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து வாருங்கள் என்று இறுதி மூன்று வசனங்களும் சொல்கின்றன.

    நீங்களே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது மற்றவர்களுக்கு உதவுவது பற்றி மிகக் குறைவாகவே சிந்திப்பீர்கள். ஆனால், கஷ்டப்படும் நேரத்திலும், மற்றவர்களுக்கு உதவும் செயல்களைச் செய்யச் சொல்லி குர்ஆன் உங்களைத் தூண்டுகிறது. இந்த நடத்தை மாற்றம் மனச்சோர்வடைந்த ஒருவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    குர்ஆன் கற்பிக்கும் இந்த சிந்தனை மாற்றமும், நடத்தை மாற்றமும், மனச்சோர்வால் தவிக்கும் எனக்கு எப்படி உதவும் என்று நீங்கள் கேட்கலாம். இதை தெளிவாக புரிந்து கொள்ள, கோக்னிடிவ் தெரபி (cognitive therapy) என்ற உளவியல் சிகிச்சை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    கோக்னிடிவ் தெரபி (cognitive therapy) என்ற உளவியல் சிகிச்சை

    மனச்சோர்வு, பதட்டக் கோளாறுகள், மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டுப் பிரச்சனைகள், திருமணப் பிரச்சனைகள், உணவுக் கோளாறுகள் மற்றும் கடுமையான மனநோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு கோக்னிடிவ் தெரபி (cognitive therapy) என்ற உளவியல் சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும் என்று உலகப் புகழ் பெற்ற அமெரிக்கன் சைக்கோலாஜிக்கல் அஸ்ஸோசியேஷன் சொல்கிறது.

    கோக்னிடிவ் தெரபி (cognitive therapy) என்றால் என்ன?

    சிந்தனை மாற்றம் மூலமாக மன நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை treat செய்யும் முறை தான் கோக்னிடிவ் தெரபி (cognitive therapy).

    கோக்னிடிவ் தெரபியில் என்ன செய்வார்கள்?

    மன நோயாளிகளை குணப்படுத்த அவர்களது சிந்தனை முறைகளை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த கோக்னிடிவ் தெரபியில் கையாளப்படும் முறைகளில் சில:

    1. மனச் சிக்கல்களை உருவாக்கும் சிந்தனைகளை அடையாளம் கண்டு, பின்னர் அவற்றை எதார்த்தத்தின் அடிப்படையில் மறு பரிசீலனை செய்வது.
    2. நடத்தை மாற்றத்தை உண்டாக்கும் உந்துதல் சக்தியை பற்றிய புரிதலைப் பெறுதல்.
    3. பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறன்களைப் பயன்படுத்துதல்.
    4. தன்நம்பிக்கையை வளர்க்கும் பயிற்சிகளை கொடுத்தல்.

    கோக்னிடிவ் தெரபி பயன் தருமா?

    அமெரிக்கன் சைக்கோலாஜிக்கல் அஸ்ஸோசியேஷன் கோக்னிடிவ் தெரபியை பற்றி இவ்வாறு சொல்கிறது:

    கோக்னிடிவ் தெரபி நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது என்று பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. பல ஆய்வுகளில், கோக்னிடிவ் தெரபி மற்ற தெரபிகளை விடவும், மனநல மருந்துகளை விடவும் அதிக பயனுள்ளதாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சந்தேகமில்லாமல், கோக்னிடிவ் தெரபியில் கையாளப்படும் முறைகள் மன நோயாளிகளில் நல்ல மாற்றத்தை உருவாக்குகின்றன என்பதற்கு ஏராளமான அறிவியல் சான்றுகள் உள்ளன.

    அமெரிக்கன் சைக்கோலாஜிக்கல் அஸ்ஸோசியேஷன்

    குர்ஆனில் கோக்னிடிவ் தெரபி (cognitive therapy)

    நமக்குள் ஏற்படுத்தும் சிந்தனை மாற்றத்தின் மூலமாகவும், நடத்தை மாற்றத்தின் மூலமாகவும், ஆறுதலையும் நம்பிக்கையையும் தரும் கோக்னிடிவ் தெரபியை தான் குர்ஆனில் உள்ள இந்த அத்தியாயமும் செய்கிறது.

    நவீன மனநல மருத்துவர்கள் பயன்படுத்தும் இந்த கோக்னிடிவ் தெரபி என்ற சிகிச்சை முறையை 1400 வருடங்களுக்கு முன்னால் அருளப்பட்ட திருக்குர்ஆன் கையாள்வது நம்மை பிரமிப்புக்லாக்குகிறது.

    மனச்சோர்விலிருந்து வெளியேறுங்கள்! தற்கொலை எண்ணங்களை தவிருங்கள்!

    குர்ஆன் கற்றுத் தரும் சிந்தனை மாற்றத்தையும், நடத்தை மாற்றத்தையும்
    கடைப்பிடிப்பதன் மூலம், மனச்சோர்விலிருந்து வெளியேறுவது மட்டுமல்லாமல் தற்கொலை எண்ணங்களையும் தவிர்க்கலாம். ஆரோக்கியமான மனநிலையோடு வாழ திருகுர்ஆனின் இந்த அத்தியாயம் நமக்கு வழிகாட்டுகிறது.

    திருக்குர்ஆன்

    முஹம்மது நபி அவர்களால் திருக்குர்ஆன் எழுதப்பட்டது என்று பலர் நினைக்கின்றனர். இது தவறாகும். முஸ்லிம்களை பொறுத்த வரையில், திருக்குர்ஆன் முழுவதும் இறைவனின் வார்த்தை தான் என்று நம்புகிறார்கள். எல்லா மனிதர்களுக்கும் வழிகாட்டியாக இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட இறுதி வேதம் தான் திருக்குர்ஆன். நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் திருக்குர்ஆனில் உள்ளது.

    மனிதர்களே! உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரை வந்திருக்கிறது. இது உள்ளங்களில் உள்ள நோய்களைக் குணப்படுத்தக்கூடியதாகவும், தன்னை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களுக்கு வழி காட்டக்கூடிய தாகவும், ஓர் அருட்கொடையாகவும் இருக்கிறது.

    குர்ஆன் அத்தியாயம் 10 வசனம் 57

    நல்லவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்? கெட்டவர்கள் எப்படி சொகுசாக வாழ்கிறார்கள்? சொர்க்கம் நரகம் என்றெல்லாம் சொல்கிறார்களே அதெல்லாம் உண்மையா? இத பற்றியெல்லாம் குர்ஆன் என்ன சொல்கிறது? இது பற்றி தெரிந்து கொள்ள திருக்குர்ஆன் தமிழ் மொழியாக்கத்தை வாங்கி படியுங்கள்.

    திருகுர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பை ஆன்லைனில் படிக்க, இந்த வலைதளத்தை பார்வையிடவும்.

    WHAT OTHERS ARE READING

    Most Popular