வெறுப்புணர்வு புற்றுநோயை உண்டாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் வெறுப்பு அரசியல் அதிகரித்து வருவதை நாம் பார்க்கிறோம். பல சக்திகள் தங்கள் சுயநலத்திற்காக மக்களுக்கு இடையில் வெறுப்பை விதைக்க முயற்சிக்கின்றன. இளைஞர்களும், சிறுவர்களும் கூட இந்த வெறுப்பு அரசியலின் வலைக்குள் சிக்கிக் கொள்கிறார்கள் என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம். வெறுப்பிற்கு எதிர்வினையும் வெறுப்பாக அமைவதை நம்மால் காணமுடிகிறது. இதனால் நம் சமூகமே சிதறுண்டு போக வாய்ப்புள்ளது.
வெறுப்புணர்வு சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல், தனிநபர்களுக்கும் கடுமையான தீங்கு விளைவிக்கும். வெறுப்புணர்வு ஒரு மனிதரின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பார்ப்போம்.
வெறுப்புணர்வு உடலிலும் மனதிலும் தீங்கு விளைவிக்கும்
வெறுப்புணர்வு உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் நம்மை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. வெறுப்புணர்வு நமது மூளைகுத் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. என்னது வெறுப்புணர்வு மூளையை பாதிக்குமா என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம்! வெறுப்புணர்வு மூளையை எப்படி பாதிக்கிறது என்பதை பார்ப்போம்.
நமக்கு ஏதாவது ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டால், உடனே செயல்பட, நம் மூளை எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கும். நீங்கள் ஒருவரை வெறுக்கும்போது, மூளை அதை அச்சுறுத்தலாக புரிந்து கொள்கிறது. இதனால் உடல் முழுக்க இரசாயனங்களை அனுப்புகிறது.
கார்டிசோல், அட்ரினலின் மற்றும் நோராட்ரீனலின்
நமக்கு வெறுப்புணர்வு ஏற்படும் போது, நம் உடலில் கார்டிசோல், அட்ரினலின் மற்றும் நோராட்ரீனலின் போன்ற இரசாயனங்கள் சுரக்கின்றன. நமக்கு ஒரு ஆபத்து ஏற்பட்டால், அந்த ஆபத்திலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள உதவுவது இந்த இரசாயனங்கள் தான். இந்த இரசாயனங்கள் உடல் உறுப்புகளை சென்றடைந்த உடனேயே, நமக்கு கோபமும், ஆக்ரோஷமும் ஏற்படும். இதனால் தான், ஒருவர் வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் போது, அவரது பாடி லாங்குவேஜ் மாறுகிறது.

வெறுப்புணர்வு ஒரு மனிதருக்கு திரும்ப திரும்ப ஏற்படும் பொழுது, இந்த இரசாயனங்கள் அதிகமாக சுரக்கும். இதனால் நம் உடலில் உள்ள அட்ரீனல் சுரப்பிகள் பாதிக்கப்பட்டு, எடை அதிகரிப்பு, தூக்கமின்மை, பதட்டம், மனச்சோர்வு, போன்ற பிரச்சனைகள் தோன்றுகின்றன. காலப்போக்கில், இந்த இரசாயனங்கள் நமது நரம்பு மண்டலம், நோயெதிர்ப்பு மண்டலம், அகச்சுரப்பி மண்டலம் ஆகியவற்றை பாதிக்கத் தொடங்கி விடும். இதனால், நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், ஆட்டோ இம்யூன் கோளாறுகள், புற்றுநோய் போன்ற தீராத நோய்கள் ஏற்படும்.
வெறுப்புணர்வை ஒரு சாதாரண விஷயமாக நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள்.
வெறுப்புணர்வும் உளவியலும்
வெறுப்புணர்வு நம் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதை உளவியல் வல்லுநர்கள் “மிரர் எபெக்ட்” (Mirror Effect) என்று அழைக்கின்றனர். ஒரு நபர், அவர் வெறுக்கும் விஷயத்தை நோக்கி ஈர்க்கப்படுகிறார். இதனால், வெறுப்புணர்வு மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது. இதோடு நின்று விடாமல், ஒரு கண்ணாடி எப்படி பிம்பத்தை பிரதிபலிக்குமோ, அதே போல் நாம் வெளிப்படுத்தும் வெறுப்புணர்வை, நம் மனது நமக்குள்ளேயே பிரதிபலிக்கும். ஒருவர் தொடர்ந்து வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் போது, மனதில் பிரதிபலிக்கும் இந்த பிம்பங்கள் பெரிதாகிக் கொண்டே போகும். இது மனதை மிக மோசமாக பாதிக்கிறது. வெறுப்புணர்வை வெளிப்படுத்துவதை அந்த நபர் நிறுத்தாத வரை, இந்த பிம்பங்களும் நிற்காமல் பெரிதாகிக் கொண்டே போகும்.
வெறுப்புணர்விலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்
- வெறுப்புணர்வின் தீமைகளை மனதில் வைத்து, உங்களுக்குள் வெறுப்புணர்வு ஏற்பட்டால் அதை உடனே அடையாளம் கண்டு ஒப்புக் கொள்ளுங்கள்.
- வெறுப்பை தூண்டக்கூடிய காரணிகளை புரிந்துக் கொள்ளுங்கள். உதாரணமாக: தவறான புரிதல், பொய்ப் பிரச்சாரம், போன்றவை.
- ஒவ்வொரு சூழ்நிலைக்கும், ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு நேர்மறையான பக்கம் உள்ளது. இந்த நேர்மறையான பக்கத்தின் மீது கவனம் செலுத்துங்கள்.
- புத்தகங்களை வாசிப்பது, உடற்பயிற்சி செய்வது, தொண்டு செய்வது போன்ற மனதை ஒருமுகப்படுத்தப் பயன்படும் ஆக்கபூர்வமான பழக்க வழக்கங்களில் உங்கள் நேரத்தை செலவிடுங்கள்.
- இறைப் பிராத்தனை, தியானம், சுவாச பயிற்சிகள் போன்றவற்றை செய்து வாருங்கள்.
அன்பை பெருக்குங்கள்! வெறுப்பை ஒதுக்குங்கள்!
முஹம்மது நபி அவர்கள் சொன்னார்கள்:
(உங்களைப் படைத்த) ஓர் இறைவனை நம்பாத வரை, நீங்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டீர்கள். நீங்கள் ஒருவரையொருவர் நேசிக்காத வரை, நீங்கள் ஓர் இறைவனை நம்ப முடியாது. நீங்கள் ஒருவரையொருவர் நேசிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை உங்களுக்கு சொல்லட்டுமா? உங்களுக்கிடையில் அமைதியைப் பரப்புங்கள்.
சஹீஹ் முஸ்லிம்