இந்தியாவிலே பல்வேறு மதத்தை சேர்ந்த, பல்வேறு ஜாதிகளை சேர்ந்த, பல்வேறு மொழிகளை பேசக்கூடிய, பல்வேறு கலாச்சாரங்களை பின்பற்றக் கூடிய மக்கள் வாழ்கிறார்கள். நமக்கு மத்தியிலே, அமைதியும் நல்லிணக்கமும் நிலவ வேண்டும் என்று நாம் எல்லோரும் ஆசைப்படுகிறோம். ஆனால், பன்முக சமூகத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் அடைவது ஒரு பெரிய சவால் தான்.
கடந்த காலத்தில் வாழ்ந்த ஒரு பன்முக சமுதாயத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள ஏதாவது சம்பவம் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தால், முஹம்மது நபி அவர்களின் வாழ்க்கையிலிருந்து ஒரு அற்புதமான சம்பவத்தை நம்மால் காண முடிகிறது. அந்த சம்பவம் என்ன?
பின்னணி
அந்த சம்பவத்தை பார்ப்பதற்கு முன்னால், ஒரு சிறிய பின்னணி.
முஹம்மது நபி அவர்கள் மக்கா என்ற ஊரில் பிறக்கிறார்கள். “அல்-அமீன்” அதாவது நம்பிக்கையாளர் என்று தனது மக்களால் போற்றப்பட்ட முஹம்மது நபி அவர்கள், தனது 40 வது வயதில், மக்கள் மத்தியில் நம்மை படைத்த கடவுள் ஒருவன் தான், எந்த வித ஏற்றத் தாழ்வும் இல்லாமல் எல்லா மனிதர்களும் சமமானவர்கள் என்ற கொள்கையை போதிக்க தொடங்குகிறார்கள்.
பிறப்பாலும், பரம்பரையாலும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த மக்காவினுடைய ஆதிக்க சக்திகளுக்கு இது பிடிக்கவில்லை. முஹம்மது நபி அவர்களுடைய இந்த “சமத்துவ” சிந்தாந்தம் தங்கள் அதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் சவாலாக அமையும் என்று பயந்த ஆதிக்க சக்திகள், முஹம்மது நபியையும் அவருடைய சீடர்களையும் துன்புறுத்தத் தொடங்கினர். இந்த கடுமையான துன்புறுத்தல் காரணமாக, முஹம்மது நபி அவர்கள் மக்காவை விட்டு வெளியேறி, மதீனா என்ற நகரத்திற்கு குடிபெயர்ந்தார்.

மதினா
மதினா பன்முக சமூகமாக இருந்தது. பலதெய்வ வழிபாட்டு செய்யும் மதங்களையும், யூத மதத்தையும் பின்பற்றும் பல்வேறு கோத்திரங்கள் மதினாவில் வாழ்ந்து வந்தனர். சில யூத கோத்திரங்கள் பலதெய்வ வழிபாட்டு செய்யும் சில கோத்திரங்களோடு கூட்டணி வைத்து ஒரு அணியாகவும், வேறு சில யூத கோத்திரங்கள் மற்ற பலதெய்வ வழிபாட்டு செய்யும் கோத்திரங்களோடு கூட்டணி வைத்து, எதிரணியாகவும் செயல்பட்டு வந்தனர். இவர்களுக்கு இடையில் பல நூற்றாண்டுகளாக கடும் பகையும், சண்டையும் நிலவியது.

மதினா அரசியல் சாசனம்
மதினா நகரத்திற்கு வந்த முஹம்மது நபி அவர்களை, தலைவராக மக்கள் ஏற்றுக்கொண்டனர். மதினாவில் வாழ்ந்த கோத்திரங்களுக்கு இடையில் நடந்த முடிவில்லாத சண்டைகளை முடிவுக்குக் கொண்டுவரவும், அமைதியை நிலை நாட்டவும், முஹம்மது நபி அவர்கள் மதினாவில் வாழ்ந்த பல்வேறு கோத்திரங்களோடு ஒரு உடன்படிக்கை செய்தார்கள். இந்த உடன்படிக்கையை, “மதினாவின் அரசியல் சாசனம்” என்று வரலாற்று ஆசிரியர்கள் அழைக்கின்றனர்.
சமூக அமைதிக்கும், நல்லிணக்கத்துக்கும் தேவையான சமத்துவம், நீதி, மத சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்த உடன்படிக்கை எழுதப்பட்டது. அதில் சிலவற்றை நாம் பார்ப்போம்.

மத சுதந்திரம்
யூதர்களும், முஸ்லிம்களை போலவே ஒரு சமூகமாக அங்கீகரிக்கப்படுகின்றனர். முஸ்லிம்கள் தங்கள் மதத்தை கடைப்பிடிக்க உரிமை உண்டு. அதே போல், யூதர்களுக்கும் தங்கள் மதத்தை கடைப்பிடிக்க உரிமை உண்டு.
யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நல்லிணக்கமும், புரிதலும் இருக்கும்.
சமத்துவம்
யூதர்கள் முஸ்லிம்களை ஒப்பந்தத்திற்கு அழைத்தால், முஸ்லிம்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். அதே போல், முஸ்லிம்கள் யூதர்களை ஒப்பந்தத்திற்கு அழைத்தால், யூதர்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள்.
இந்த உடன்படிக்கைக்கு முன், யூத கோத்திரங்களுக்கு மத்தியிலே கூட பாகுபாடும், பாரபட்சமும் பரவலாக இருந்தது. இதை புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை பார்ப்போம். பனூ நதீர், பனூ குரைஸா என்ற இரண்டு யூத கோத்திரங்கள், மதீனாவில் வாழ்ந்து வந்தன. பனூ நதீர் கோத்திரத்தை சேர்ந்த ஒருவர் பனூ குரைஸா கோத்திரத்தை சேர்ந்த ஒருவரைக் கொன்றால், தண்டனையாக அவர்கள் நஷ்டஈடு மட்டுமே கொடுப்பார்கள். ஆனால், அவர்களது கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் பனூ குரைஸாவை சேர்ந்த ஒருவரால் கொல்லப்பட்டால், அவர்கள் அந்தக் கொலைகாரனைக் கொன்றுவிடுவார்கள்.
முஹம்மது நபி அவர்கள், இந்த உடன்படிக்கை மூலம் இத்தகைய அநீதமான நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து சமத்துவத்தை நிலைநாட்டினார்.
நீதி
தீமையான, அநியாயமான செயல்களை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்று திரள்வார்கள். அநியாயம் செய்தவர் முஸ்லிமாக இருந்தாலும், அவருக்கு எதிராக மற்ற முஸ்லிம்கள் ஒன்று திரள்வார்கள்.
உதாரணமாக: ஒரு முஸ்லிம், முஸ்லிமல்லாத ஒருவரை ஏமாற்றி விட்டால் , மற்ற முஸ்லிம்கள் அனைவரும் நீதியின் பக்கம் நின்று, ஏமாற்றப்பட்ட முஸ்லிமல்லாத நபரை மட்டுமே ஆதரிப்பார்கள்.
எந்த ஒரு முஸ்லிமும் கொலைகாரர்களை ஆதரிக்கவோ, அல்லது அவருக்கு அடைக்கலம் கொடுக்கவோ கூடாது.
தீமை செய்யும் நபரையோ அல்லது ஒப்பந்தத்தை மீறும் நபரையோ பாதுகாக்க இந்த உடன்படிக்கை ஒருபோதும் தலையிடாது.
மதினா அரசியல் சாசனமும், இந்தியாவும்
மத சுதந்திரம், சமத்துவம், நீதி போன்ற அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்த உடன்படிக்கை மூலம் மதினாவின் பல்வேறு கோத்திரங்களுக்கு இடையில் நடந்த முடிவில்லாத சண்டைக்கும், அடக்குமுறைகளுக்கும் முஹம்மது நபி அவர்கள் முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
1400 ஆண்டுகளுக்குப் பிறகும், மதினா அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்ட மத சுதந்திரம், சமத்துவம், நீதி போன்ற அடிப்படை உரிமைகளை பற்றிய கருத்துக்கள், இந்தியா போன்ற பன்முக சமுதாயத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பதை நம்மால் பார்க்க முடியும்.
மத சுதந்திரம், சமத்துவம் நீதி போன்ற அடிப்படை உரிமைகளை நடைமுறையில் அமல்படுத்துவதின் மூலம் தான், நாம் எல்லோரும் விரும்பும் அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் அடைய முடியும் என்பதில் சந்தேகமில்லை.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு – நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே! ஜெய் ஹிந்த்!